Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/டெஸ்ட் 'உலகை' வென்றது தென் ஆப்ரிக்கா: ஆஸி.,யை வீழ்த்தி வரலாறு படைத்தது

டெஸ்ட் 'உலகை' வென்றது தென் ஆப்ரிக்கா: ஆஸி.,யை வீழ்த்தி வரலாறு படைத்தது

டெஸ்ட் 'உலகை' வென்றது தென் ஆப்ரிக்கா: ஆஸி.,யை வீழ்த்தி வரலாறு படைத்தது

டெஸ்ட் 'உலகை' வென்றது தென் ஆப்ரிக்கா: ஆஸி.,யை வீழ்த்தி வரலாறு படைத்தது

ADDED : ஜூன் 14, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
லார்ட்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்க அணி. லார்ட்சில் நடந்த பைனலில், மார்க்ரம் சதம் கைகொடுக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஐ.சி.சி., தொடரில் கோப்பை வெல்லும் 27 ஆண்டு கனவு நனவானது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.

பின், 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (102), கேப்டன் பவுமா (65) அவுட்டாகாமல் இருந்தனர்.

மார்க்ரம் நம்பிக்கை: நான்காம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 69 ரன் தேவைப்பட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 147 ரன் சேர்த்த போது கம்மின்ஸ் 'வேகத்தில்' பவுமா (66) வெளியேறினார். ஸ்டார்க் பந்தில் ஸ்டப்ஸ் (8) போல்டானார். பொறுப்பாக ஆடிய மார்க்ரம் (136), ஹேசல்வுட் பந்தில் அவுட்டானார். ஸ்டார்க் பந்தில் ஒரு ரன் எடுத்த கைல் வெர்ரேன் வெற்றியை உறுதி செய்தார்.

தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெடிங்ஹாம் (21), வெர்ரேன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்ட நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் வென்றார்.

மூன்றாவது அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மூன்றாவது அணியானது தென் ஆப்ரிக்கா (2023-25). ஏற்கனவே நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23) அணிகள் கோப்பை வென்றிருந்தன.

ரூ. 30.78 கோடி பரிசு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணிக்கு ரூ. 30.78 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு ரூ. 18 கோடி பரிசாக கிடைத்தது.

1998க்கு பின்...

ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடர்களில் தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் ஆனது. கடைசியாக 1998ல் வங்கதேசத்தில் நடந்த ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்றிருந்தது.

சிறந்த 'சேஸ்'

141 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில், லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் சிறந்த 'சேஸ்' வெற்றியை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடம் பிடித்தது தென் ஆப்ரிக்கா (282 ரன்). முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (343 ரன், எதிர்: இங்கிலாந்து, 1984) உள்ளது.

பலே பவுமா

டெஸ்ட் அரங்கில், அணியை வழிநடத்திய முதல் 10 போட்டியில் அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன் பட்டியலில் முதலிடத்தை இங்கிலாந்தின் பெர்சி சாப்மேனுடன் பகிர்ந்து கொண்டார் தென் ஆப்ரிக்காவின் பவுமா. இருவரும் தலா 9 வெற்றி பெற்றுத்தந்தனர்.

* தவிர, பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி தொடர்ச்சியாக 8 டெஸ்டில் வெற்றி பெற்றது.

நான்காவது தோல்வி

ஐ.சி.சி., தொடர்களின் பைனலில் 4வது முறையாக தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா. கடந்த 1975 (எதிர்: வெஸ்ட் இண்டீஸ்), 1996 (எதிர்: இலங்கை) உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் வீழ்ந்த ஆஸ்திரேலியா, 2010ல் இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை பைனலில் தோற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us