ADDED : பிப் 12, 2024 10:49 PM

சென்னை: கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியை தமிழக அணி 'டிரா' செய்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் முதல் தர ரஞ்சி கோப்பை 89வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்கில் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் கர்நாடகா 366, தமிழகம் 151 ரன் எடுத்தன கர்நாடகா அணி 2வது இன்னிங்சில் 139 ரன் எடுத்தது. பின் 355 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 3ம் நாள் முடிவில் 36/1 ரன் எடுத்திருந்தது. விமல் (16), ரஞ்சன் பால் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில். பொறுப்பாக ஆடிய பிரதோஷ் ரஞ்சன் பால் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது விமல் குமார் (31) அவுட்டானார். ரஞ்சன் பால் (74) நம்பிக்கை தந்தார். பூபதி குமார் (19), முகமது (15) சோபிக்கவில்லை. தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்து தடுமாறியது.
பின் இணைந்த பாபா இந்திரஜித், விஜய் சங்கர் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இருவரும் அரைசதம் விளாசினர். வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 40 ரன் தேவைப்பட்டன. இந்நிலையில் இந்திரஜித் (98), விஜய் சங்கர் (60) அவுட்டானது பின்னடைவாக அமைந்தது. அடுத்து வந்த சுரேஷ் லோகேஷ்வர் (1) ஏமாற்றினார்.
ஆட்டநேர முடிவில் தமிழக அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 338 ரன் மட்டும் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது.
முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் கர்நாடகாவுக்கு 3, தமிழக அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை தேவ்தத் படிக்கல் (கர்நாடகா) வென்றார்.