/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி: ராஜஸ்தானுக்கு 10வது தோல்வி பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி: ராஜஸ்தானுக்கு 10வது தோல்வி
பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி: ராஜஸ்தானுக்கு 10வது தோல்வி
பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி: ராஜஸ்தானுக்கு 10வது தோல்வி
பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி: ராஜஸ்தானுக்கு 10வது தோல்வி
ADDED : மே 19, 2025 12:18 AM

ஜெய்ப்பூர்: பிரிமியர் லீக் போட்டியில் 10 ரன் வித்தியாசத்தில் வென்ற பஞ்சாப் அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை நெருங்கியது.
ஜெய்ப்பூரில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
வதேரா விளாசல்: பஞ்சாப் அணி துவக்கத்தில் திணறியது. பிரியன்ஷ் (9), மிட்சல் ஓவன் (0), பிரப்சிம்ரன் (21) விரைவில் அவுட்டாக, 3.1 ஓவரில் 34/3 ரன் எடுத்து தவித்தது. நான்காவது விக்கெட்டுக்கு ஷ்ரேயஸ்- நேஹல் வதேரா, 44 பந்தில் 67 ரன் சேர்த்தனர். ஷ்ரேயஸ், 30 ரன் எடுத்தார். மத்வால் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வதேரா, 25 பந்தில் அரைசதம் எட்டினார். வதேரா, 70 ரன்னுக்கு (5x4, 5x6) வெளியேறினார். கடைசி கட்டத்தில் கலக்கிய சஷாங் சிங், 27 பந்தில் அரைசதம் அடித்தார். ஓமர்சாய் 9 பந்தில் 21 ரன் விளாசினார். கடைசி 4 ஓவரில் 60 ரன் எடுக்கப்பட்டன. பஞ்சாப் அணி 20 ஓவரில் 219/5 ரன் குவித்தது. சஷாங் சிங் (59, 5X4, 3X6), ஓமர்சாய் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.
கலக்கல் துவக்கம்: கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், இளம் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி துவக்கம் தந்தனர். அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் 22 ரன் (4, 4, 4, 6, 4) விளாசினார். யான்சென் வீசிய அடுத்த ஓவரில் பைவவ் மிரட்ட, 17 ரன் (6, 4, 6) கிடைத்தது. 4.4 ஓவரில் ராஜஸ்தான் 76/0 ரன் எடுத்தது.
ஹர்பிரீத் திருப்பம்: விரலில் காயம் அடைந்த ஷ்ரேயசிற்கு மாற்று வீரராக வந்த 'ஸ்பின்னர்' ஹர்பிரீத் பிரார் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது வலையில் வைபவ் (40, 4x4, 4x6)) சிக்கினார். 24 பந்தில் அரைசதம் எட்டிய ஜெய்ஸ்வால் (50, 9x4, 1x6), பிரார் பந்தில் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. கேப்டன் சாம்சன் (20), ரியான் பராக் (13), ஹெட்மெயர் (11) நிலைக்கவில்லை. போராடிய துருவ் ஜுரல் அரைசதம் கடந்தார்.
யான்சென் அபாரம்: கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டன. யான்சென் பந்துவீசினார். முதல் இரு பந்தில் 2 ரன் கொடுத்தார். 3, 4வது பந்தில் துருவ் (53), ஹசரங்கா (0) அவுட்டாகினர். அடுத்த பந்தை 'வைடாக' வீச 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. கடைசி இரு பந்துகளில் மபாகா 2 பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். யான்சென் 11 ரன் மட்டும் விட்டுக் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார். ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்த ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் 209/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆட்டநாயகன் விருதை ஹர்பிரீத் பிரார் (3/22) வென்றார்.
சபாஷ் வைபவ்
ராஜஸ்தான் அணியின் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி நேற்று 15 பந்தில் 40 ரன் எடுத்தார். இத்தொடரில் அதிக 'ஸ்டிரைக் ரேட்' (குறைந்தது 50 பந்து சந்தித்தவர்) வைத்திருக்கும் வீரர் பட்டியலில் முதலிடம் பெற்றார். இதுவரை 89 பந்தில் 195 ரன் எடுத்துள்ளார். இதன் 'ஸ்டிரைக் ரேட்' 219.10. அடுத்த இடத்தில் லக்னோ அணியின் பூரன் (204 பந்தில் 410 ரன், 200.98) உள்ளார்.
* அரைசதம் விளாசிய ராஜஸ்தானின் ஜெய்ஸ்வால், இத்தொடரில் 500 ரன்னை கடந்தார். 13 போட்டியில் 523 ரன் எடுத்துள்ளார்.
* பிரிமியர் அரங்கில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் பஞ்சாப் அணி (219/5, முதல் இன்னிங்ஸ்) அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை அணி 217/2 ரன் (எதிர், ராஜஸ்தான், 2025) எடுத்திருந்தது.