Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வாழ்வென்றால் போராடும் போர்க்களமே: பாண்ட்யாவின் தன்னம்பிக்கை மந்திரம்

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே: பாண்ட்யாவின் தன்னம்பிக்கை மந்திரம்

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே: பாண்ட்யாவின் தன்னம்பிக்கை மந்திரம்

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே: பாண்ட்யாவின் தன்னம்பிக்கை மந்திரம்

ADDED : மார் 17, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''கிரிக்கெட் வாழ்க்கையில் '360 டிகிரி' மாற்றத்தை சந்தித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் எனக்கு எதிராக குரல் எழுப்பினர். 'டி-20' உலக கோப்பை வென்றதும், ரசிகர்களின் அன்பை திரும்ப பெற்றேன்,''என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.

இந்திய அணியின் நட்சத்திர 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, 31. கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் கேப்டனாக களமிறங்கினார். மும்பைக்கு 5 முறை கோப்பை வென்று தந்த ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்ததால், உள்ளூர் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இத்தொடரில் சோபிக்காத மும்பை அணி லீக் சுற்றில் 14 போட்டிகளில் 10ல் தோற்றது. புள்ளிப்பட்டியலில் கடைசி 10வது இடம் பிடித்தது.

ரசிகர்கள் வரவேற்பு: இந்த சோதனையில் இருந்து மீண்ட பாண்ட்யா, கடந்த ஆண்டு இந்திய அணி 'டி-20' உலக கோப்பை வெல்ல கைகொடுத்தார். இதற்காக மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில், பாண்ட்யாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஐ.பி.எல்., தொடரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மறந்து போனது. சமீபத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வெல்லவும் பாண்ட்யா உதவினார்.

இது குறித்து பேட்டி அளித்த பாண்ட்யா : போர்க்களத்தை விட்டு எப்போதும் வெளியேற கூடாது. என்னை பொறுத்தவரை கிரிக்கெட் தான் களம். வெற்றி கிடைக்காவிட்டாலும், உறுதியுடன் போராடினேன். என்னை சுற்றி நடக்கும் தேவையில்லாத விஷயங்களை கண்டுகொள்ளவில்லை. கிரிக்கெட் தான் எனது சிறந்த துணை என கருதினேன். ஐ.பி.எல்., சோதனையில் இருந்து மீள முடியும் என நம்பினேன். கடின பயிற்சிக்கு பலன் கிடைத்தது. சில விஷயங்கள் விதிப்படி நடக்கும். இதன்படி 'டி-20' உலக கோப்பை வென்றதும், என் வாழ்க்கையில் '360 டிகிரி' மாற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் எனக்கு எதிராக இருந்த ரசிகர்களின் அன்பை திரும்ப பெற்றேன்.

பவுலிங் மீது காதல்: பவுலிங் தான் இப்போது எனது முதல் காதலாக மாறியுள்ளது. பயிற்சியில் பேட்டிங்கைவிட அதிக நேரம் பந்துவீசுகிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே எனது திட்டமாக இருக்கும். கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடர் மும்பை அணிக்கு சாதகமாக அமையவில்லை. இதிலிருந்து பாடம் படித்தோம். 2025, தொடருக்கு சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மும்பை வான்கடே மைதானத்தில் எளிதில் ரன் குவிக்கலாம். இதனால், தரமான பவுலர்கள் தேர்வு செய்துள்ளோம். இம்முறை சாதிப்போம்.

இளமை துணிச்சல்: ஐ.பி.எல்., தொடரில் திறமையான இளம் வீரர்கள் பங்கேற்கின்றனர். துணிச்சலாக விளையாடுகின்றனர். இவர்கள், தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கிரிக்கெட்டில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். பொறுமையாக இருந்து, சோதனைகளை சமாளிக்க வேண்டும்.இவ்வாறு பாண்ட்யா கூறினார்.

வருவாரா சூர்யா

கடந்த ஆண்டு மும்பை அணி தனது கடைசி லீக் போட்டியில் (எதிர், லக்னோ) தாமதமாக பந்துவீசியது. இதற்காக கேப்டன் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் இவர், இம்முறை சென்னைக்கு எதிரான மும்பையின் முதல் போட்டியில் (மார்ச் 23, சென்னை) பங்கேற்க முடியாது. ரோகித் சர்மா மீண்டும் தலைமை ஏற்க வாய்ப்பு குறைவு. பும்ரா காயத்தால் அவதிப்படுகிறார். திலக் வர்மா, பவுல்ட், சான்ட்னர் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். இந்திய 'டி-20' அணியை வழிநடத்தும் சூர்யகுமார், மும்பை அணிக்கு கேப்டனாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us