ADDED : ஜூன் 05, 2024 11:26 PM

புதுடில்லி: இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 37. டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் சாய்த்த இரண்டாவது இந்தியர் (கும்ளே முதலிடம்). ஐ.பி.எல்., தொடரில் 2008-15ல் சென்னை அணிக்காக விளையாடினார். தற்போது ராஜஸ்தான் அணியில் உள்ளார்.
இவர், சென்னை அணியின் உயர் செயல்திறன் மையத்தின் தலைமை பொறுப்பேற்க உள்ளார். இதனால் அஷ்வின், மீண்டும் சென்னை அணிக்காக விளையாடலாம்.
சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ''தலைசிறந்த பவுலர்களில் ஒருவர் அஷ்வின். இந்தியா, வெளிநாடுகளில் உள்ள சென்னை அணியின் உயர் செயல்திறன் மையங்களை மேற்பார்வையிடுவார்.
இவரது வருகை எங்களது அகாடமிகளுக்கு பெரிய உற்சாகம் தரும். ஐ.பி.எல்., ஏலத்தில் நடக்கும் விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது. என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.
தோனியை பொறுத்தவரையில் ஓய்வு குறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும். தொடர்ந்து விளையாட வேண்டும் என நாங்களும், ரசிகர்களும் விரும்புகிறோம். அவரது முடிவுக்கு மதிப்பு தருவோம்,''என்றார்.