/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கண்ணிலே ஈரம் சேருதே கல்லையும் காலம் மாற்றுதே... * டிராவிட் அழுத தருணம் கண்ணிலே ஈரம் சேருதே கல்லையும் காலம் மாற்றுதே... * டிராவிட் அழுத தருணம்
கண்ணிலே ஈரம் சேருதே கல்லையும் காலம் மாற்றுதே... * டிராவிட் அழுத தருணம்
கண்ணிலே ஈரம் சேருதே கல்லையும் காலம் மாற்றுதே... * டிராவிட் அழுத தருணம்
கண்ணிலே ஈரம் சேருதே கல்லையும் காலம் மாற்றுதே... * டிராவிட் அழுத தருணம்
ADDED : ஜூலை 23, 2024 11:20 PM

சென்னை: ''உலக கோப்பையை கட்டி அணைத்து டிராவிட் கதறி அழுத தருணம் மறக்க முடியாதது,''என அஷ்வின் தெரிவித்தார்.
பார்படாசில் நடந்த 'டி-20' உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 'டி-20' உலக கோப்பை வென்றதால், அப்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கோலி, பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்டோர் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் சிந்தினர்.
கடந்த 2007ல் டிராவிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி, உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் சோபிக்கவில்லை. லீக் சுற்றுடன் வெளியேறியது. வீரராக ஐ.சி.சி., கோப்பை வெல்ல முடியாத டிராவிட், அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பயிற்சியாளராக கோப்பை வென்று சாதித்தார். காலம் தனக்கு சாதகமாக மாறியதால், கோப்பையை கையில் ஏந்தி ஆர்ப்பரித்தார்.
இது குறித்து இந்திய அணியின் 'சுழல்' நாயகன் அஷ்வின் கூறுகையில்,'' டி-20 உலக கோப்பையை டிராவிட் வசம் கொடுத்தார் கோலி. உடனே கோப்பையை கட்டி அணைத்து கதறி அழுதார் டிராவிட். கோப்பை கையில் கிடைத்த தருணத்தை கொண்டாடினார். 2007ல் இவரது தலைமையில் கோப்பை வெல்ல முடியவில்லை. இதற்கு பின் இவர், ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியை வகிக்கவில்லை. இந்திய அணியுடன் தான் இருந்தார். அணி தோல்வி அடைந்தால் அல்லது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், டிராவிட் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பினர்.
பயிற்சியாளராக கடினமாக உழைத்தார். வீட்டில் இருக்கும் போது கூட, இந்திய அணியின் வளர்ச்சிக்காக திட்டமிட்டார். உலகின் வெற்றிகரமான அணியாக மாற்றினார்,'' என்றார்.
ராஜஸ்தான் அழைப்பு
'டி-20' உலக கோப்பையுடன் டிராவிட் பதவிக் காலம் முடிந்தது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக காம்பிர் நியமிக்கப்பட்டார்.
இந்தச் சூழலில் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே 2013ல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார் டிராவிட். சாம்பியன்ஸ் லீக் 'டி-20' பைனல், ஐ.பி.எல்., 'பிளே-ஆப்' சுற்றுக்கு அணியை அழைத்துச் சென்றார். 2014, 2015ல் ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக இருந்தார்.
டிராவிட் வரவால், தற்போதைய ராஜஸ்தானின் அணியின் இயக்குநர், பயிற்சியாளராக உள்ள இலங்கையின் சங்ககரா தக்க வைக்கப்படுவாரா அல்லது பணியில் இருந்து விடுவிக்கப்படுவாரா என தெரியவில்லை.