Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணி வலுவான முன்னிலை: 6 விக்கெட் சாய்த்தார் சிராஜ்

இந்திய அணி வலுவான முன்னிலை: 6 விக்கெட் சாய்த்தார் சிராஜ்

இந்திய அணி வலுவான முன்னிலை: 6 விக்கெட் சாய்த்தார் சிராஜ்

இந்திய அணி வலுவான முன்னிலை: 6 விக்கெட் சாய்த்தார் சிராஜ்

ADDED : ஜூலை 04, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாம் டெஸ்டில் இந்திய அணி வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிறது. சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது.

இரண்டாவது டெஸ்ட், பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 77/3 ரன் எடுத்திருந்தது.

விக்கெட் சரிவு: மூன்றாம் நாள் ஆட்டத்தில் முகமது சிராஜ் வீசிய 22வது ஓவரின் 3வது பந்தில் ஜோ ரூட் (22) அவுட்டானார். அடுத்த பந்தில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டக்-அவுட்' ஆனார். ஐந்தாவது பந்தை ஜேமி ஸ்மித் பவுண்டரிக்கு விரட்ட, சிராஜின் 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. இங்கிலாந்து அணி 84/5 என திணறியது.

இரண்டு சதம்: பின் இணைந்த புரூக், ஸ்மித் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய ஸ்மித், பிரசித் கிருஷ்ணா வீசிய 32வது ஓவரில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உட்பட 23 ரன் விளாசினார். ஸ்மித், 77 பந்தில் சதம் கடந்தார். பிரசித் கிருஷ்ணா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய புரூக், டெஸ்ட் அரங்கில் தனது 9வது சதத்தை பதிவு செய்தார். இருவரும் 150 ரன்னை கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர்.

சிராஜ் அசத்தல்: ஆறாவது விக்கெட்டுக்கு 303 ரன் சேர்த்த போது ஆகாஷ் தீப் பந்தில் புரூக் (158) போல்டானார். வோக்ஸ் (5) ஏமாற்றினார். சிராஜ் 'வேகத்தில்' பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், பஷிர் 'டக்-அவுட்' ஆகினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஸ்மித் (184) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் சிராஜ் 6, ஆகாஷ் 4 விக்கெட் சாய்த்தனர்.

இந்தியா முன்னிலை: பின், 180 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (28), ராகுல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 64/1 ரன் எடுத்து, 244 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ராகுல் (28), கருண் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாவது முறை

'வேகத்தில்' மிரட்டிய இந்தியாவின் முகமது சிராஜ், டெஸ்ட் அரங்கில் 2வது முறையாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு கேப்டவுன் டெஸ்டில் (எதிர்: தென் ஆப்ரிக்கா) 9 ஓவரில், 15 ரன் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட் கைப்பற்றி, தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.



'டக்-அவுட்' சோகம்

டெஸ்ட் அரங்கில், ஒரு இன்னிங்சில் 6 இங்கிலாந்து பேட்டர்கள் 'டக்-அவுட்' ஆனது முதன்முறையாக அரங்கேறியது. இதற்கு முன், 1956ல் நடந்த ஓவல் டெஸ்டில் (எதிர்: ஆஸி.,) இங்கிலாந்து சார்பில் 5 பேர், ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

அதிவேக சதம்

பேட்டிங்கில் அசத்திய ஜேமி ஸ்மித், டெஸ்ட் அரங்கில் அதிவேக சதம் விளாசிய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 3வது இடத்தை (தலா 80 பந்து) ஹாரி புரூக் (2022, எதிர்: பாக்.,) உடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் கில்பர்ட் ஜெசோப் (76 பந்து, எதிர்: ஆஸி., 1902, இடம்: ஓவல், லண்டன்), பேர்ஸ்டோவ் (77 பந்து, எதிர்: நியூசி., 2022, இடம்: நாட்டிங்ஹாம்) உள்ளனர்.

ஐந்தாவது இடம்

டெஸ்ட் அரங்கில், குறைந்த பந்தில் 150 ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 5வது இடம் பிடித்தார் ஜேமி ஸ்மித் (144 பந்து). முதல் நான்கு இடங்களில் ஹாரி புரூக் (115 பந்து, எதிர்: பாக்., 2022), ஸ்டோக்ஸ் (135 பந்து, எதிர்: தெ.ஆப்., 2016), டக்கெட் (140 பந்து, எதிர்: இந்தியா, 2024), போப் (142 பந்து, எதிர்: ஜிம்பாப்வே, 2025) உள்ளனர்.

தொப்பி பறந்தது

பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், ஆடுகள அம்பயர் ஷர்புதோலாவின் (வங்கதேசம்) தொப்பி காற்றில் இரண்டு முறை பறந்து கீழே விழுந்தது. இதனால் தொப்பியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அம்பயர் பணியை மேற்கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us