ADDED : ஜூன் 16, 2024 11:39 PM

நார்த் சவுண்டு: இங்கிலாந்து அணி 41 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் நமீபியாவை வென்றது. இதன்மூலம் இங்கிலாந்து 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது.
வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்டில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து, நமீபியா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து களமிறங்கியது. மழையால் போட்டி மூன்று மணி நேரம் தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற நமீபியா 'பீல்டிங்' தேர்வு செய்தது. தலா 11 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பட்லர் (0), சால்ட் (11) ஜோடி ஏமாற்றியது. பேர்ஸ்டோவ் 18 பந்தில் 31 ரன் (2 சிக்சர், 3 பவுண்டரி) விளாசினார். இங்கிலாந்து அணி 8 ஓவரில் 82/3 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின், தலா 10 ஓவர் போட்டியாக நடந்தது. மொயீன் அலி (16), லிவிங்ஸ்டன் (13) ஆறுதல் தந்தனர். ஹாரி புரூக் (47*) கைகொடுக்க இங்கிலாந்து அணி 10 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தது.
பின் நமீபியாவின் வெற்றிக்கு 10 ஓவரில் 126 ரன் என 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலக்கு மாற்றப்பட்டது. நிக்கோலஸ் டேவின் (18) 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார். மைக்கேல் வான் லிங்கன் (33), டேவிட் வைஸ் (27) ஓரளவு கைகொடுத்தனர். நமீபியா அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 83 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
'பி' பிரிவு லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தலா 5 புள்ளி பெற்றன. 'ரன் ரேட்' அடிப்படையில் 2வது இடம் பிடித்த இங்கிலாந்து (3.611) 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெற்றது. ஸ்காட்லாந்துக்கு (1.255) வெளியேறியது.