Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சிறந்த கேப்டன் ரோகித் சர்மா * வெங்சர்க்கார் பாராட்டு

சிறந்த கேப்டன் ரோகித் சர்மா * வெங்சர்க்கார் பாராட்டு

சிறந்த கேப்டன் ரோகித் சர்மா * வெங்சர்க்கார் பாராட்டு

சிறந்த கேப்டன் ரோகித் சர்மா * வெங்சர்க்கார் பாராட்டு

ADDED : மார் 12, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''சிறந்த கேப்டன் ரோகித் சர்மா. தனது எதிர்காலத்தை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். ஓய்வு குறித்த செய்திகள் தேவையற்றவை,'' என வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 37. கடந்த 2024ல் 'டி-20' உலக கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி., தொடரில் இந்தியாவுக்கு இரண்டு கோப்பை வென்று தந்தார். 37 வயது ஆன போதும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும் ரோகித், ஓய்வு பெறப் போகிறார் என தொடர்ந்து செய்தி வெளியாகின. இதை மறுத்த ரோகித்,' இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம்,'' என்றார்.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் கூறியது:

ரோகித் ஓய்வு பெறப் போகிறார் என தேவையில்லாமல் ஏன் வதந்திகளை பரப்புகின்றனர் எனத் தெரியவில்லை. தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்யும் தகுதி ரோகித்திற்கு உள்ளது. இதற்கான இடத்தில் தான் அவர் உள்ளார்.

மற்றபடி நான் ஜாதகம் பார்ப்பவன் அல்ல. 2027 உலக கோப்பை தொடருக்கு முன், இன்னும் அதிக போட்டிகள் உள்ளன. இதற்கு முன் 'பார்ம்', உடற்தகுதிக்கு ஏற்ப, ரோகித் தொடர்ந்து விளையாடுவது முடிவு செய்யப்படும். இப்போதுள்ள சூழலில் ஓய்வு குறித்து பேசுவது நல்லதல்ல. ஏனெனில், அவர், கேப்டனாகவும், வீரராகவும் சிறப்பாக செயல்படுகிறார்.

ஒருநாள் அரங்கில் மூன்று இரட்டை சதம் அடித்தவர் ரோகித் (264, 209, 208). இதைவிட இவரது திறமைக்கு சான்று தேவையில்லை. கோலி, ரோகித் போன்ற வீரர்களிடம் சிறந்த செயல்திறன் இருக்கும். முக்கிய போட்டிகளில் அசத்தி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துவிடுவர். இவர்கள் அணியில் உள்ளனர் என்பதே, எதிரணி வீரர்களின் மன உறுதியை குலைத்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'மாஸ்டர் ஸ்டிரோக்'

ஐ.பி.எல்., தொடரில் 2024ல் கோல்கட்டா அணிக்கு கோப்பை வென்று தந்தவர் ஸ்ரேயாஸ். இருப்பினும் இவரை அணி நிர்வாகம் கழற்றி விட, இம்முறை பஞ்சாப் கேப்டனாக களமிறங்குகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டு தன்னை மீண்டும் நிரூபித்தார்.

வெங்சர்க்கார் கூறுகையில்,'' ஸ்ரேயாஸ் தனது திறமையை உணர்ந்து செயல்பட்டார். 6வது இடத்தில் வந்த ராகுல், சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தினார். அதேநேரம், இவருக்கு முன், அக்சர் படேலை (5வது) களமிறக்குவதை மட்டும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 ஸ்பின்னர்களை களமிறக்கிய தேர்வாளர்கள் முடிவு தான் 'மாஸ்டர் ஸ்டிரோக்' ஆக அமைந்தது,'' என்றார்.

பாண்டிங் கணிப்பு

ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறுகையில்,'' கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சமாக பெரிய தொடர்களில் சாதித்தவுடன், அடுத்து உங்கள் ஓய்வுக்காக எல்லோரும் காத்திருக்கின்றனர். இது ஏன் எனத் தெரியவில்லை. இதற்கெல்லாம் தெளிவாக ரோகித் பதில் தந்து விட்டார். அடுத்த உலக கோப்பை (2027) தொடரில் சாதிக்க திட்டமிட்டு இருப்பார் என நினைக்கிறேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us