/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அபிஷேக் சர்மா 'மின்னல்' சதம்: இந்திய அணி இமாலய வெற்றிஅபிஷேக் சர்மா 'மின்னல்' சதம்: இந்திய அணி இமாலய வெற்றி
அபிஷேக் சர்மா 'மின்னல்' சதம்: இந்திய அணி இமாலய வெற்றி
அபிஷேக் சர்மா 'மின்னல்' சதம்: இந்திய அணி இமாலய வெற்றி
அபிஷேக் சர்மா 'மின்னல்' சதம்: இந்திய அணி இமாலய வெற்றி
UPDATED : ஜூலை 08, 2024 12:19 AM
ADDED : ஜூலை 08, 2024 12:10 AM

ஹராரே: இரண்டாவது 'டி-20' போட்டியில் அசத்திய இளம் இந்திய அணி, 100 ரன் வித்தியாசத்தில் வென்றது. அபிஷேக் சர்மா, 46 பந்தில் சதம் அடித்தார்.
ஜிம்பாப்வே சென்றுள்ள இளம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், 'பேட்டிங்' தேர்வு செய்தார். கலீல் அஹமது நீக்கப்பட்டு, தமிழகத்தின் சாய் சுதர்சன் வாய்ப்பு பெற்றார்.
அபிஷேக் விளாசல்: பென்னட் பந்தில் சிக்சர் அடித்து, இந்தியாவுக்கு அதிரடி துவக்கம் தந்தார் அபிஷேக் சர்மா. மறுபக்கம் சுப்மன் (2) ஏமாற்றினார். பின் அபிஷேக், ருதுராஜ் சேர்ந்து அசத்தினர். மையர்ஸ் ஓவரில் (11வது) அபிஷேக் 2 சிக்சர், 3 பவுண்டரி அடிக்க, மொத்தம் 28 ரன் எடுக்கப்பட்டன. 33 பந்தில் அரைசதம் எட்டினார் அபிஷேக். மசகட்சா ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசிய அபிஷேக், 46 பந்தில் சதம் எட்டினார். 100 ரன்னுக்கு (7 பவுண்டரி, 8 சிக்சர்) அவுட்டானார்.
10 ஓவரில் 160 ரன்:கடைசி கட்டத்தில் ருதுராஜ், ரிங்கு சிங் மிரட்டினர். சத்தாரா ஓவரில் (18) ருதுராஜ் வரிசையாக 4, 6, 4, 4 என விளாச, 20 ரன் கிடைத்தது. ஜோங்வா வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் பறக்கவிட்டார். முதல் 10 ஓவரில் 74/1 ரன் எடுத்த இந்தியா, அடுத்த 10 ஓவரில் 160 ரன் குவித்தது. இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 234 ரன் எடுத்தது. ருதுராஜ் (77, 11 பவுண்டரி, 1 சிக்சர்), ரிங்கு சிங் (48, 2 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
அபார பந்துவீச்சு: கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி, முகேஷ் குமார், அவேஷ் கான் 'வேகத்தில்' சிதறியது. பிஷ்னோய் 'சுழல்' ஜாலம் காட்ட, விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. வெஸ்லி மாதவெரே அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். பென்னட் (26), லுாக் ஜோங்வா (33), கேம்பல் (10) ஆறுதல் அளித்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, ஜிம்பாப்வே அணி 18.4 ஓவரில் 134 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. இதன் மூலம் முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு, இந்திய அணி 'சுடச்சுட' பதிலடி கொடுத்தது. தொடர் 1-1 என சமநிலையை எட்டியது.
ஆட்டநாயகன் விருதை அபிஷேக் சர்மா தட்டிச் சென்றார்.
இளம் வீரர்
'டி-20' அரங்கில் இளம் வயதில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் 4வது இடம் பிடித்தார் அபிஷேக் (23 ஆண்டு, 307 நாட்கள்). முதல் மூன்று இடங்களில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (21 ஆண்டு, 279 நாட்கள், எதிர்: நேபாளம், 2023), சுப்மன் கில் (23 ஆண்டு, 146 நாட்கள், எதிர்: நியூசிலாந்து, 2023), சுரேஷ் ரெய்னா (23 ஆண்டு, 156 நாட்கள், எதிர்: தென் ஆப்ரிக்கா, 2010) உள்ளனர்.
அதிக ரன்
'டி-20' அரங்கில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த அணியானது இந்தியா (234/2). இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 229/2 ரன் (2018, ஹராரே) எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
100 ரன் வித்தியாசம்
ஜிம்பாப்வேக்கு எதிராக அதிக ரன் (100) வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வரிசையில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் (2018, ஹராரே) பகிர்ந்து கொண்டது இந்தியா.
முதல் இந்திய வீரர்
கிரிக்கெட் அரங்கில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசி சதம் எட்டிய முதல் இந்திய வீரரானார் அபிஷேக். இதற்கு முன் இந்தியாவின் சுப்மன் கில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்து (எதிர்: நியூசி., 2023, ஐதராபாத்) இரட்டை சதம் அடித்திருந்தார்.
இரண்டு இன்னிங்ஸ்
'டி-20' அரங்கில் முதல் சதம் எட்ட அபிஷேக் சர்மாவுக்கு இரண்டு இன்னிங்ஸ் தான் தேவைப்பட்டது. முதல் போட்டியில் 'டக்-அவுட்' ஆனார். நேற்று சதம் விளாசினார். ஐ.சி.சி., முழு உறுப்பினர் நாடுகளில் இவ்வளவு விரைவாக சதம் எட்டிய முதல் வீரரானார்.
317.39 'ஸ்டிரைக் ரேட்'
8வது ஓவரில் ஜோங்வா பந்தை துாக்கி அபிஷேக் அடித்தார். மககட்சா கைநழுவ, கண்டம் தப்பினார். அப்போது 24 பந்தில், 28 ரன் தான் எடுத்திருந்தார். அதற்கு பின் சந்தித்த 23 பந்தில், 7 சிக்சர், 5 பவுண்டரியுடன் 72 ரன் எடுத்தார். இதன் 'ஸ்டிரைக் ரேட்' 317.39 ஆக இருந்தது.
33...13
இந்தியாவின் அபிஷேக் 33 பந்தில் அரைசதம் கடந்தார். அடுத்த 13 பந்தில் 5 சிக்சர், 3 பவுண்டரி விரட்டிய, தனது முதல் சதத்தை 46 பந்தில் பதிவு செய்தார்.
பஞ்சாப் 'சிங்கம்'
பஞ்சாப்பை சேர்ந்தவர் அபிஷேக் சர்மா 23. சமீபத்தில் முடிந்த 17வது ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக (484 ரன், 14 போட்டி, 'ஸ்டிரைக் ரேட்' 204.21) அசத்தினார். சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால், துவக்க வீரருக்கான இடத்தை அபிஷேக் தட்டிச் செல்லலாம்.