/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் மீன் விதை பண்ணை செயல்பாட்டிற்கு வருமா? பாகூர் மீன் விதை பண்ணை செயல்பாட்டிற்கு வருமா?
பாகூர் மீன் விதை பண்ணை செயல்பாட்டிற்கு வருமா?
பாகூர் மீன் விதை பண்ணை செயல்பாட்டிற்கு வருமா?
பாகூர் மீன் விதை பண்ணை செயல்பாட்டிற்கு வருமா?
ADDED : செப் 14, 2025 12:38 AM

அரசு மீன் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் மீன் விதை பண்ணை செயல்பட்டு வந்தது. இங்கு, உள்நாட்டு வகை மீன் விதைகள் (குஞ்சுகள்) உற்பத்தி செய்யப்பட்டு, குறிப்பிட்ட அளவு வளர்ந்தவுடன், அதனை மீன் வளர்ப்போர், விவசாயிகள், புதிய தொழில் முனைவோருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சில ஆண்டுகள் செயல்பட்டு வந்த இந்த மீன் விதை பண்ணை, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, எந்த பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இருப்பினும், அவ்வப்போது, நன்னீர் மீன் வளர்ப்போருக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது வருகிறது.
இந்த மீன் விதை பண்ணையை மீண்டும் புனரமைத்து,உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கிட வேண்டும் என, மீன் வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ரூ. 40 லட்சம் செலவில், மீன் விதை பண்ணையை புனரமைத்து, தொட்டிகளில், மீன் விதை உற்பத்தி செய்யும் பணி துவங்கியது.
ஆனால், தண்ணீரின் தரத்தால், முட்டைகளில் இருந்து மீன் குஞ்சுகள் பொறிப்பு விகிதம் குறைந்தது. மீண்டும், புதியதாக போர்வெல் அமைக்கப்பட்டு பண்ணையை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இதனிடையே, கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், மதிலை உடைத்துக் கொண்டு வெள்ளம் பண்ணைக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது, மீன் விதை பண்ணை எந்த பணிகளும் இன்றி முடங்கி கிடக்கிறது.
புதுச்சேரியில் உள்ள நன்னீர் மீன் வளர்ப்போர், மீன் விதைகளை தேடி வெளி மாநிலங்களுக்கு சென்று அலைந்து திரிகின்றனர்.
தமிழக பகுதியிலும் தரமான மீன் குஞ்சுகள் கிடைக்காத நிலையில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா வரைக்கும் சென்று மீன் குஞ்சுகளை வாங்கி வந்து, அதனை ஏரி, குளம் மற்றும் பண்ணை குட்டைகளில் விட்டு வளர்த்து வருகின்றனர்.
அங்கிருந்து, ஒரு மீன் குஞ்சுவை, புதுச்சேரிக்கு கொண்டு வருவதற்கு, 3 முதல் 4 ரூபாய் வரை செலவாகிறது.
இதனால், மீன் விதைக்காக மட்டுமே பல லட்ச ரூபாய் செலவிட வேண்டி உள்ளது.
அதே மீன் குஞ்சுகளை, புதுச்சேரியில் உற்பத்தி செய்தால், ஒரு ரூபாய்க்கும் குறைவாக கொடுக்க முடியும் என நன்னீர் மீன் வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
நன்னீர் மீன் வளர்ப்பு தொழில், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, வேலைவாயப்பு,பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது.
மேலும், நன்னீர் மீன் வளர்ப்பு தொழில் மூலமாக, ஏரிகள், குளங்கள்,குட்டைகளில் ஆண்டு முழுதும் தண்ணீர் சேமிக்கப்படுவதால், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க உதவி புரிகிறது.
ஆனால், புதுச்சேரியில் தரமான மீன் குஞ்சுகள் கிடைக்காத நிலையில், அதனை தேடி அலைய முடியாமல், பலர் நன்னீர் மீன் வளர்ப்பு தொழிலை கை விட்டுள்ளனர்.
எனவே, இந்த மீன் விதை பண்ணையை மீன் வளத்துறை மூலமாகவோ அல்லது இத் தொழிலில் ஆர்வமும், அனுபவமும் உள்ள விவசாயிகளின் மூலமாகவோ மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.