Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நீர்நிலைகளின் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 18 ஏரி, குளங்களில் தண்ணீர் சேமிப்பு பூஜ்யம்

நீர்நிலைகளின் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 18 ஏரி, குளங்களில் தண்ணீர் சேமிப்பு பூஜ்யம்

நீர்நிலைகளின் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 18 ஏரி, குளங்களில் தண்ணீர் சேமிப்பு பூஜ்யம்

நீர்நிலைகளின் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 18 ஏரி, குளங்களில் தண்ணீர் சேமிப்பு பூஜ்யம்

ADDED : ஜன 03, 2024 06:31 AM


Google News
புதுச்சேரி பகுதியின் ஆண்டு சராசரி மழையளவு 1,250 மி.மீ., ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தின் பருவமழை கணிக்க முடியாத புதிராக மாறி வருகிறது.2021ம் ஆண்டு மொத்தமாக 94 நாட்கள் மழை நாட்களாக இருந்தது.

புதுச்சேரி பிராந்தியத்தில் 2,561.6 மி.மீ., மழையளவு கொட்டி, நகரை தத்தளிக்க வைத்தது. வரலாறு காணாத மழையாக இது அமைந்தது.

ஆனால், 2022ம் ஆண்டு 76 நாட்கள் மழை நாட்களாக இருந்தும், வெறும் 1,267 மி.மீ.,மட்டுமே பதிவாகி உள்ளது. அதுவும் வழக்கமான ஆண்டு சராசரி மழையளவை காட்டிலும் வெறும் 17 மி.மீ., மட்டுமே கூடுதலாக பெய்திருந்தது.

2023ம் ஆண்டு விடைப்பெற்று புத்தாண்டு பிறந்துள்ள சூழ்நிலையில் மழையளவும், நீர்நிலைகள் இருப்பும் தெரிய வந்துள்ளது.

மொத்தம் 78 நாட்களில் 1,485 மி.மீ.,மழை பெய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டினை ஒப்பிடும்போது 235 மி.மீ.,மட்டுமே கூடுதலாக பெய்துள்ளது.

ஏரிகள்


புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்தமுள்ள 84 ஏரிகளில் 23 ஏரிகள் மட்டுமே 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

11 ஏரிகள் 75 சதவீதமும், 14 ஏரிகள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையிலும், 14 ஏரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும் நிரம்பியுள்ளன. 18 ஏரிகளில் தண்ணீர் பூஜ்யமாக உள்ளது.

படுகையணை


புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்தமுள்ள 10 படுகையணைகளில் ஆறு படுகையணைகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியது. ஒரு படுகையணையில் 50 சதவீதம், 3 படுகையணைகளில் 25 சதவீதத்திற்கு கீழும் தண்ணீர் தேங்கியுள்ளது.

5 படுகையணைகளில் தண்ணீர் இருப்பு பூஜ்யமாக உள்ளது.

புதுச்சேரியில் வற்றாத ஜீவநதிகள் இல்லை. பெரிதும் நிலத்தடி நீர் மட்டத்தையே மாநிலம் சார்ந்து உள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் உயர ஆறுகள் மட்டுமின்றி ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளில் மழைநீர் சேமிப்பு மிக முக்கியம்.

ஆனால் மொத்தமுள்ள 83 நீர்நிலைகளில் 18 ஏரிகளில் தண்ணீர் இருப்பு பூஜ்யமாக உள்ளது. எனவே இந்த நீர் நிலைகளில் தண்ணீர் ஏன் தேங்கவில்லை என்பதை கண்டறிய பொதுப்பணித் துறை ஆய்வு குழுவினை களம் இறக்கி ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுவாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளுக்கு தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் நீர் வழித்தடங்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

குளங்கள் குப்பை தொட்டிகளாக மாற்றப்படுகின்றன.

எனவே நீர் நிலை ஆக்கிரமிப்பில் எது இருந்தாலும் அகற்றப்பட வேண்டும். இதில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது.

நீர் நிலை ஆக்கிரமிப்புகள் மீது கருணை காட்டக் கூடாது. மீட்கப்படும் இடங்கள் முழுமையாக தண்ணீர் சேமிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us