Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரையில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நவீன ட்ரோன் மூலம் கண்காணிப்பு

கடற்கரையில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நவீன ட்ரோன் மூலம் கண்காணிப்பு

கடற்கரையில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நவீன ட்ரோன் மூலம் கண்காணிப்பு

கடற்கரையில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நவீன ட்ரோன் மூலம் கண்காணிப்பு

ADDED : செப் 12, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: கடற்கரை சாலையில் நடந்த சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியில், நவீன ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.

தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில், நேற்று புதுச்சேரியில் 8 இடங்களில் சுனாமி ஒத்திகை நடத்தப்பட்டது. புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஒத்திகையில், சுனாமி நேரத்தில் கடலில் சிக்கித் தவிப்பவர்களையும், நகரப் பகுதியில் பேரிடர்களில் சிக்கியவர்களை மீட் பது மற்றும் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு ட்ரோன்களை பயன்படுத்தும் முறை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கமாண்டன்ட் ஆதித்யா குமார் தலைமையில் விளக்கப்பட்டது.

இதற்காக 100 அடி உயரம் 5 சதுர கி.மீ., துாரம் வரை கண்காணிக்கும் நவீன ட்ரோன்கள் கடற்கரை சாலை, கடல் பகுதியில் செலுத்தி கண்காணிக்கப்பட்டது. இதனை கலெக்டர் குலோத்துங்கன், நிதி செயலர் கிருஷ்ணன் மோகன் உப்பு, சீனியர் எஸ்.பி.கலைவாணன், உள்ளாட்சி துறை இயக்குநர் சக்திவேல், கமிஷனர் கந்தசாமி ஆகியோர் பார்வையிட்டனர். செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர்கள் வெங்கடாசலபதி, பழனி ராஜா, நெவார் சிஸ்டம்ஸ் நரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நல்லவாடு மீனவ கிராமத்தில் தாசில்தார் பிரித்திவி தலைமையில் நடந்த ஒத்திகையில், மைக் மூலம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து, சுனாமியில் சிக்கிய 30 பேரை, தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அரியாங்குப்பம், கொம்யூன் ஆணையர் ரமேஷ் முன்னிலையில், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

பாகூர் அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், காலை 9:30 மணிக்கு அந்தமான் நிக்கோபார் தீவில் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட அறிவிப்பை தொடர்ந்து, போலீசார் பனித்திட்டு, நரம்பை, மூ.புதுக்குப்பம் கிராமங்களில் மைக் மூலம் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். அங்கிருந்த மக்களை, வாகனங்களில் அழைத்து வந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர். கடலில் மூழ்கிய மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி அளித்தனர்.

நிகழ்ச்சியில், சப் கலெக்டர் குமரன், தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை துறை, போலீஸ், கடலோர பாதுகாப்பு படை, சுகாதாரம், தீயணைப்பு, பொதுப்பணித் துறை, மின்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

குருசுக்குப்பம் இங்கு காலை 11:30 மணிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அங்குள்ள என்.கே.சி., அரசு மேல்நிலைப்பள்ளியை கடல் நீர் சூழ்ந்தது. வெளியே வரமுடியாமல் தவித்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மீட்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்.

ஆபத்தான நிலையில் இருந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

போராட்டத்தால் பரபரப்பு

சுனாமி ஒத்திகையில் ஈடுபட்ட அதிகாரிகள், நரம்பை மீனவ கிராம மக்களை, பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து செல்ல பி.ஆர்.டி.சி., பஸ்சில் ஏற்றினர். அப்போது கிராம மக்கள், எங்கள் கிராமத்திற்கு இயக்கிய பஸ் நிறுத்தப்பட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்போது மட்டும் பஸ் எப்படி கொண்டுவர முடிந்தது என, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் பிறகே கிராம மக்கள், பஸ்சில் இருந்து இறங்கி, பிள்ளையார்குப்பம் பாதுகாப்பு மையத்திற்கு சென்றனர். இச்சம்பவத்தினால், சற்று நேரம் பரபரப்பு நிலவியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us