/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏர்போர்ட் சாலையில் பகலில் எரியும் விளக்குகள்; பல ஆயிரம் யூனிட் மின்சாரம் வீண் ஏர்போர்ட் சாலையில் பகலில் எரியும் விளக்குகள்; பல ஆயிரம் யூனிட் மின்சாரம் வீண்
ஏர்போர்ட் சாலையில் பகலில் எரியும் விளக்குகள்; பல ஆயிரம் யூனிட் மின்சாரம் வீண்
ஏர்போர்ட் சாலையில் பகலில் எரியும் விளக்குகள்; பல ஆயிரம் யூனிட் மின்சாரம் வீண்
ஏர்போர்ட் சாலையில் பகலில் எரியும் விளக்குகள்; பல ஆயிரம் யூனிட் மின்சாரம் வீண்
ADDED : மே 24, 2025 11:18 PM

லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் பகலில் எரியும் தெரு விளக்குகளால் பல ஆயிரம் யூனிட் மின்சாரம் தினமும் விரயமாகி வருகிறது.
புதுச்சேரியில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பொதுப்பணித் துறை, நகராட்சி, கொம்யூன் கட்டுப்பாட்டில் உள்ள ஹைமாஸ் விளக்குகள், மினிமாஸ் விளக்குகள் அனைத்து பகுதிகளிலும் பகல் நேரங்களில் எரிந்து கொண்டிருப்பது தொடர் கதையாக உள்ளது.
குறிப்பாக, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில், என்.சி.சி., வளாகத்தை ஒட்டியுள்ள தெருவிளக்குகள் தாகூர் கல்லுாரி மைதானம் முதல், ஏர்போர்ட் வரை காலை 7:00 மணிக்கு மேலும் எரிகின்றன.
ஆனால், அதே சாலையில் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தையொட்டியுள்ள தெரு விளக்குகள் சரியாக காலை 6:00 மணிக்கு சுவிட்ச் ஆப் ஆகிவிடுகின்றன. இப்படி ஒரு சாலையில் ஒரு பக்கத்தில் சரியான நேரத்தில் ஆப் ஆகி மின்சாரம் சேமிக்கப்படுகிறது. மறுபுறம் மின்சாரம் விரயமாகி வருகிறது.
தெரு விளக்குகள் டைமர்களுடன் தான் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை பல இடங்களில் செயல்படாமல் பழுதாகி கிடக்கின்றன. இதன் காரணமாக தான் பகலிலேயே தெரு விளக்குகள் எரிகின்றன. இவற்றை கண்டறிந்து மின் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து சரி செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. ஊழியர்களும் அந்தப்பக்கம் எட்டி பார்க்கவில்லை. பக்கத்தில் உள்ள தள்ளுவண்டி, பெட்டிக்கடை கடைக்காரர்கள் தெரு விளக்குகள் சுவிட்ச் ஆன்; சுவிட்ச் ஆப் செய்வதும் அரங்கேறி வருகிறது.
மின் பற்றாக்குறை தலை விரித்தாடும் இந்நேரத்தில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தாமல், பகலில் தெரு விளக்குகள் எரிய விட்டு, மின்சாரத்தை விரயமாக்குவது அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
பெரும்பாலான நகர பகுதிகளில் பகலில் எரிந்து வரும் விளக்குகள் நிறுத்தாததால், பல ஆயிரம் யூனிட் மின்சாரம் நாள்தோறும் விரயமாவதோடு, அதற்கான மின் இழப்பு செலவினங்கள் நுகர்வோர் தலையில் கட்டப்படுகிறது. சரியான நேரத்தில் தெரு மின் விளக்குகளை நிறுத்தினாலே, மின் பற்றாக்குறை தடுக்கப்படும்.
ஊருக்குக்கு தான் உபதேசம் தங்களுக்கு இல்லை என்று பொதுப்பணித் துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் மின் பற்றாக்குறை ஏற்படுவதையும், மக்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியாது. இனியாவது பகல் நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்க எடுக்க வேண்டும்.
மின் துறை கவனிக்குமா?
மின் தடை அறிவிப்பு செய்து பீடர்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது தெரு விளக்குகளின் டைமர்கள் பொதுவாக மாறிவிடுகின்றன. இந்த டைமர்களில் மீண்டும் நேரத்தை ஊழியர்கள் 'செட்' செய்வதில்லை.
இதேபோல் பழுதான டைமர்களை மாற்றுவதும் கிடையாது. இதன் காரணமாகவே டைமர்கள் இருந்தும் பகலிலேயே தெரு விளக்குகள் எரிகின்றன. இந்த விஷயத்தில் மின் துறை தனி கவனம் செலுத்த வேண்டும்.