Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம பயிற்சிக்கான அடிப்படை நிலை

உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம பயிற்சிக்கான அடிப்படை நிலை

உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம பயிற்சிக்கான அடிப்படை நிலை

உடலில் சக்தியை பெருக்கி சமநிலை அடைதல் லோம-விலோம பயிற்சிக்கான அடிப்படை நிலை

ADDED : செப் 25, 2025 03:43 AM


Google News
Latest Tamil News
கடந்த வாரம், உடலில் சக்தியை பெருக்கி, சமநிலை அடையும் 'லோம விலோம'பயிற்சி குறித்த முன்னுரை பார்த்தோம். இப்பயிற்சிக்கான அடிப்படை நிலைகள் மற்றும் அதன் செயல் விளக்கங்களை இந்த வாரம் பார்ப்போம்...

படுத்திருப்பதை விட எளிதானது வேறெதுவும் உண்டோ? பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வின் மூன்றின் ஒரு பகுதியை இந்நிலையில்தான் கழிக்கின்றனர். ஆனால், அந்த எளிய நிலையிலும் ஒரு யோகி, பூரண உணர்வுடன், தன் உடலை இந்நிலையிலும் அர்த்தமுள்ளதாக்குகிறார்.

அந்த வரிசையில் அடங்கிய பல்வேறு ஆசனங்களை ஷவாசனம், த்ருட ஆசனம், உன்முக ஆசனம் என மூன்று அடிப்படை நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைகள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் சமநிலைப்படுத்தும். தலையில் இருந்து கால்வரை உள்ள திசுக்கள் முன்பகுதி, பின்பகுதி, பக்கவாட்டில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஆற்றல் அளித்து இயக்குகிறது.

இனி செய்முறைகளை பார்ப்போம் ஷவாசனம் ஷவாசனம் என்பது 'இறந்தவரின் உடல்' எனப் பொருள். இந்த ஆசனத்தை செய்வதற்கு முன் பாய் அல்லது விரிப்பை சுருக்கம் இன்றி தரையில் விரக்கவும். (தரையில் படுத்துக் கொள்வது தவறு. தலைக்கு தலையணை வைக்கக்கூடாது.) முதுகுப்பகுதி தரையில் படும்படி படுக்கவும். பூமியின் காந்த நிலைக்கு ஏற்ப தலையை வடக்கு திசையிலும், காலை தெற்கு திசையிலும் வைக்க வேண்டும். குதிகால்கள் ஒன்றோடு ஒன்று தொடும்படி இருக்க வேண்டும். ஆனால், கால் விரல்களின் பகுதி பிரிந்து ஓய்வு நிலையில் இருக்கலாம். கைகள் பக்கவாட்டில் தளர்வான நிலையில், உள்ளங்கை வான் நோக்கி இருக்க வேண்டும். தாடைப்பகுதி நிற்கும் நிலையில் எவ்வாறு இருக்குமோ அதே இயல்பான நிலையில் இருக்க வேண்டும்.

இதில் இருந்து வேறுபட்ட நிலை ஒன்றுண்டு. அதில், கால்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடாமல் பரவலாக தளர்ந்த நிலையில் வைத்து, கைகளையும் உடலில் இருந்து சற்று அகற்றிய நிலையில் உள்ளங்கை வான் நோக்கிய நிலையில் வைக்க வேண்டும். இதனை 'ம்ருத் ஆசனம்' என்பர். இதில், கைகளும், கால்களும் பரவலாக பரப்பி இருக்கும். இது ஒரு தளர்வு நிலை ஆசனம்.

உடலை இவ்வாறு கிடத்தியபின், தலையை லேசாகத் துாக்கி உடல் முழுவதும் நேராக ஒரே கோட்டிலுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கால்கள், கணுக்கால், முட்டி, இடுப்பு, விலா எலும்பு பகுதி இவை அனைத்தும் நேரே இருக்க வேண்டும். இந்நிலையில் ஒரு நிமிடம் இருக்கம்போது ஆழ்ந்து, உணர்ந்து சுவாசிப்பது அவசியம்.

உன்முக ஆசனம் ஷவாசனத்தில் இருந்து இடது கையை தலைக்கு மேலே துாக்கி தரையில் வைக்கவும். திரும்பி முகம் கீழ் நோக்கிய நிலையில் கைகளை உடலின் பக்கவாட்டில் உள்ளங்கை கீழ் நோக்கி வைக்கவும். முகவாய் (தாடை) தரையில் இருக்கும் (கழுத்தில் இறுக்கம் ஏற்பாடமல் இருக்க வேண்டும்). கால்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நீட்டிய வண்ணம் உடலை நேராக வைத்து ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும். இந்த நிலை தளர்வு நிலை ஆசனங்களுள் ஒன்றல்ல. இந்நிலை வேறுபல ஆசனங்கள் செய்ய ஏதுவான தொடக்க நிலை மட்டுமே.

முகம் கீழ்நோக்கிய நிலையில் உள்ள தளர்வு நிலை ஆசனத்தின் பெயர் 'மகராசனம்'. உன்முக ஆசனத்தில் இருந்து கால்களை சிறிது அகலப்படுத்தி கைகளை தலைக்கு அடியில் வைக்க வேண்டும். முகவாயின் அடியில் இடது கை மேல் வலது கை வைத்து, தாடையை இதன்மேல் வைக்க வேண்டும். இது ஒரு தளர்வு நிலை ஆசனமாகும்.

த்ருட ஆசனம் உன்முகஆசனத்தில் இருந்து இடப்பக்கமாக திரும்பவும். வலப்பக்கம் மேலே இருக்கும். நேர்கோடு இட்டது போல் உடல் நேராக நீண்டு இருக்கும். இதுவே த்ருட ஆசனம். தலையை லேசாக துாக்கி உடல் நேராக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். த்ருட ஆசனத்தில் உடலின் எடை கால், தொடை மற்றும் இடுப்பில் பரவலாக வைக்கப்பட்டிருக்கும். பிட்டத்தில் அல்ல. முதல்முறையாக செய்பவர்களுக்கு இந்நிலையில் இருப்பது சற்று கடினம். இடது கை தலைக்கு அடியில் மடித்து வைத்து, வலது கை தொடை மீது நீட்டி வைக்கவும். உடலின் பகுதிகளின் உணர்வுடன், ஆழ்ந்து நீண்டு சுவாசித்து, இந்நிலையில் ஒரு நிமிடம் இருக்கவும். பின்பு வலப்பக்கத்தில் மாற்றி செய்யவும்.

இந்த தனித்துவம் வாய்ந்த உடல் நிலைகளின் வரிசையில் உள்ள இந்த ஆசனங்கள் அனைத்தும் மிக வலிமைமிக்கது. உடலியக்கம் உறுப்புகளின் இயக்கம் சரிவர அமைய இந்த வரிசையை தொடர்ந்து பயிற்சி செய்தால், நேர்மின் ஆற்றல் பெறலாம். உடலை, சாதாரணமாக நேரான நிலையில் வைத்திருப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை இந்த லோம-விலோம வரிசை நிலைகள் நமக்கு உணர்த்தும்.

லோம-விலோம ஆசனங்களின் முதல் பாக செய்முறைகளை அடுத்த வாரம் பார்ப்போம்...





      Our Apps Available On




      Dinamalar

      Follow us