/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/6 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் மின் இணைப்பு... இலவசம்; 'என் வீடு, என் நலம்' திட்ட விழாவில் முதல்வர் அறிவிப்பு6 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் மின் இணைப்பு... இலவசம்; 'என் வீடு, என் நலம்' திட்ட விழாவில் முதல்வர் அறிவிப்பு
6 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் மின் இணைப்பு... இலவசம்; 'என் வீடு, என் நலம்' திட்ட விழாவில் முதல்வர் அறிவிப்பு
6 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் மின் இணைப்பு... இலவசம்; 'என் வீடு, என் நலம்' திட்ட விழாவில் முதல்வர் அறிவிப்பு
6 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் மின் இணைப்பு... இலவசம்; 'என் வீடு, என் நலம்' திட்ட விழாவில் முதல்வர் அறிவிப்பு
ADDED : ஜூன் 19, 2025 04:46 AM

புதுச்சேரி: மாநிலத்தில் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு சூரிய சக்தி மின் இணைப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி, ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடரிலும், அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு சம்மந்தப்பட்ட துறை, விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து, சம்மந்தப்பட்ட துறை செயலர், நிதித்துறை செயலர், தலைமைச் செயலர், சம்மந்தப்பட்ட துறை அமைச்சர், முதல்வர் வழியாக கவர்னரின் ஒப்புதலை பெற்ற பிறகே திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அதன்படி, கடந்த 2023-24 பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் துறை சார்பில் 'என் வீடு, என் நலம்' செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும், என்ன காரணத்தினாலோ, அந்த நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2024-25 பட்ஜெட்டில் இதே திட்டத்தை அறிவித்த முதல்வர், ஆடி மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்றார். மேலும், மத்திய அரசின் திட்டத்தில் விவசாயிகளுக்கு சூரிய மின்சக்தியில் இயங்கும் பம்ப்செட் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றார்.
இந்நிலையில் கடந்த 2023-24 பட்ஜெட்டில் அறிவித்த 'என் வீடு, என் நலம்' திட்டத்தை, நேற்று தாவரவியல் பூங்காவில் நடந்த விழாவில் 'என் வீடு, என் நலம்' என்ற பெயரில் துவக்கி வைத்த முதல்வர் ரங்கசாமி, ரூ.5,000 மதிப்புள்ள 28 தோட்டக்கலை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை 150 சுய உதவிக்குழுக்களுக்கு இலவசாமாக வழங்கி பேசியதாவது:
நகரமயத்தால் விளை நில பரப்பளவும், விவசாய உற்பத்தியும் குறைகிறது. இதனால், நமக்கு தேவையான உணவும் குறைகிறது. இருக்கின்ற இடத்தில் கவனம் செலுத்தி விவசாயம் சார்ந்த உற்பத்தியை பெருக்க வேண்டும்.
முன்பெல்லாம், இரும்பு சத்துள்ள முருங்கை கீரை அனைத்து வீடுகளிலும் இருக்கும். ஆனால், இப்போது அதை பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் 4 பைக், கார் நிற்கிறது. அதற்கு இடம் இருக்கிறது. ஆனால், முருங்கை மரம் வைக்க இடமில்லை. மாடி தோட்டம் அமைத்து முருங்கை மரம், மிளகாய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்யலாம். அதற்காகத்தான் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளோம். ரூ.1.5 கோடியில் துவங்கிய இத்திட்டம் ரூ.3 கோடிக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது.
மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்கின்றனர். மாடிகளில் சோலார் அமைத்து மின் உற்பத்தியை பெருக்க வேண்டும். இதன் மூலம், நமக்கு தேவையான மின்சாரத்தை எடுத்து கொண்டு, மீதமுள்ள மின்சாரத்தை, மின்துறைக்கு கொடுத்தால், வருமானமும் கிடைக்கும். மின் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
மாடி தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தியுடன், சோலார் மூலம் மின் உற்பத்தியையும் பெருக்க முடியும்.
இதேபோன்று, விவசாயிகளின் பம்ப் செட்களுக்கு இலவசமாக சூரிய மின் சக்தி திட்டம் அமைத்து கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம், மின் உற்பத்தியை பெருக்கி, பம்ப் செட்களை இயக்கலாம். மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இத்திட்டத்தை விரைவில் துவங்கி, 6,000 விவசாயிகளுக்கு சூரிய மின் சக்தி திட்டம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நமக்கு மின்சார சேமிப்பு மற்றும் கட்டணம் இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. இதுபோன்று நமக்கு இருக்கும் இடங்களை கொண்டு, மின் உற்பத்தியை பெருக்கி கொள்ள வேண்டும்' என்றார்.
விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வேளாண் செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் வசந்தகுமார், தோட்டக்கலை இணை இயக்குநர் சண்முகவேலு கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கோவை பாரதியார் பல்கலைக்கழ உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் பிரபாகரன், 'என் வீடு, என் நலம்' திட்டத்தில் காய்கறி பயிர் சாகுபடி மற்றும் சமையல் கழிவுகளை உரமாக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.