ADDED : ஜன 05, 2024 06:36 AM

புதுச்சேரி : பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித் துறை ஊழியர்கள் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் கடந்த 2015-16ம் ஆண்டில் அரசு பொதுப்பணித்துறையின் 2,642 வவுச்சர் ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அப்போது, நடந்த சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அனைவரையும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீண்டும் வேலை கேட்டு 7 ஆண்டு காலமாக பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, பொதுப்பணித் துறையில் சம்பளம் பெற்று வேலை செய்த அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்பட்டு, சம்பளம் 10,500 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
சட்டசபை கூட்டத் தொடரில், அறிவித்த முதல்வரின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, தலைமை பொறியாளர் அலுவலகத்தினை நேற்று காலை 11:30 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வீகன், வினோத், சத்தியவதி, மணிவண்ணன் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த பொதுப்பணித் துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின், 2:30 மணியளவில் போராட்டத்தை முடித்துக் கொண்டு, சபாநாயகர் செல்வத்தை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.