/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விகிதம் புதுச்சேரியில் இன்று முதல் அமல் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விகிதம் புதுச்சேரியில் இன்று முதல் அமல்
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விகிதம் புதுச்சேரியில் இன்று முதல் அமல்
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விகிதம் புதுச்சேரியில் இன்று முதல் அமல்
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விகிதம் புதுச்சேரியில் இன்று முதல் அமல்
ADDED : செப் 22, 2025 02:39 AM

புதுச்சேரி: புதிய ஜி.எஸ்.டி., வரி விகிதம் இன்று முதல் புதுச்சேரியில் அமலாகிறது. வணிகர்கள் பில்களில் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி.,விகிதங்களைக் குறிப்பிட்டு நுகர்வோர்களுக்கு அதன் பலன்களை வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி வணிக வரி துறை தணிக்கை புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் ரேவதி செய்திக்குறிப்பு:
56-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி விகிதங்களைக் குறைப்பதற்கான பல்வேறு சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள்:
தற்போதுள்ள 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய நான்கு ஜி.எஸ்.டி., வரி விகித அமைப்பு, இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என, எளிமையான இரண்டு விகிதங்களாக மாற்றப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மற்றும் சாமானியர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5 சதவீத சலுகை ஜி.எஸ்.டி., வரி விகிதமும், மற்ற பொருட்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விகிதமும் இருக்கும். உணவு தானியங்கள், விவசாயப் பொருட்கள், கல்வி சேவைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வரி விலக்கின் கீழ் இருக்கும்.
12 சதவீதம் மற்றும் 28 சதவீத ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. 12 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் 5 சதவீத சலுகை ஜி.எஸ்.டி., வரி விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
சில பொருட்கள் மட்டுமே 18 சதவீத ஜி.எஸ்.டி., விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல், 28 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஆடம்பர பொருட்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத ஜி.எஸ்.டி., வரி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் சாமானியர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வரிச் சுமையைக் குறைக்கும்.
இது சிறு வணிகர்களுக்கும் வணிகங்களுக்கும் வியாபாரம் செய்வதை எளிதாக்கும். திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை அமல்படுத்துவதற்கான அறிவிக்கைகளை புதுச்சேரி அரசின் வணிக வரித்துறை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வரி விகிதங்கள் இன்று 22ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும், இன்று 22ம் தேதி முதல் வழங்கும் பில்களில் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., விகிதங்களைக் குறிப்பிட வேண்டும்.
வணிகர்கள் இந்த வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், வணிக வரித்துறையை அணுகலாம். இல்லையெனில் 73977 17723 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் அனுப்பலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.