ADDED : ஜன 11, 2024 11:58 PM

புதுச்சேரி: நிலுவை சம்பளம் கேட்டு ரேஷன் கடை ஊழியர்கள் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து நேற்று பாரதிய நியாயவிலைக்கடை ஊழியர் சங்கத்தினர் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த டி.நகர் போலீசார் குடிமை பொருள் வழங்கல் துறை நுழைவு வாயிலை பூட்டியதை தொடர்ந்து பாரதிய ஊழியர்கள் நலச்சங்கத் தலைவர் முருகானந்தம்,செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து,இன்ஸ்பெக்டர் பாலமுகன்,சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களை சமாதானப்படுத்தினர்.
துணை இயக்குனர் தயாளனை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
பின்,துணை இயக்குனரை சந்தித்த ஊழியர்கள்,ரேஷன் கடைகளை முழுமையாக திறந்து அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.நிலுவையில் உள்ள சம்பளத்தை ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவதாக துணை இயக்குனர் தயாளன் உறுதியளித்தை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.