Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செயற்பொறியாளர், கான்ட்ராக்டர் கைது; லஞ்சம் கைமாறியபோது சி.பி.ஐ., சுற்றி வளைத்தது

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செயற்பொறியாளர், கான்ட்ராக்டர் கைது; லஞ்சம் கைமாறியபோது சி.பி.ஐ., சுற்றி வளைத்தது

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செயற்பொறியாளர், கான்ட்ராக்டர் கைது; லஞ்சம் கைமாறியபோது சி.பி.ஐ., சுற்றி வளைத்தது

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செயற்பொறியாளர், கான்ட்ராக்டர் கைது; லஞ்சம் கைமாறியபோது சி.பி.ஐ., சுற்றி வளைத்தது

ADDED : மார் 24, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: கட்டுமான பணிக்கு கமிஷன் பெற்றதாக எழுந்த புகாரில், புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய மூவரை சி.பி.ஐ., சுற்றி வளைத்து கைது செய்தது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம், சாலை, குடிநீர், மேம்பாலம் பணிகள் நடக்கிறது. பணிகளை டெண்டர் எடுக்கும் ஒப்பந்த நிறுவனங்கள், மொத்த டெண்டர் தொகையில், 20 சதவீதத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கமிஷன் தருவதாக சி.பி.ஐ.,க்கு புகார்கள் சென்றன.

அதையடுத்து, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட சில அதிகாரிகளின் மொபைல்போன் உரையாடல்களை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், தலைமை பொறியாளர் தீனதயாளன் தனது மகள் திருமண அழைப்பிதழ் வழங்கவும், காரைக்காலில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்யவும் நேற்று முன்தினம் காரைக்கால் சென்றார். அங்கு, கட்டுமான பணிகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்த பின்பு, மதியம் கடற்கரையோரம் உள்ள புதுச்சேரி அரசின் சீகல்ஸ் ஓட்டலில் தங்கினார்.

அப்போது, பொதுப்பணித்துறையின் காரைக்கால் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட சில அதிகாரிகள், பொதுப்பணித் துறை ஒப்பந்தாரர்கள், தீனதயாளனை அவரது அறையில் ரகசியமாக சந்தித்து பேசினர்.

அச்சமயம், காரைக்காலில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகள் செய்து வரும் மன்னார்குடியை சேர்ந்த கட்டுமான நிறுவனம் மூலம், 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கைமாறியதாக கூறப்படுகிறது. அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சி.பி.ஐ. அதிகாரிகள், தீனதயாளன் தங்கியிருந்த அறையை சுற்றி வளைத்தனர். அறையில் இருந்த தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்தாரர் மன்னார்குடி இளமுருகு ஆகிய மூவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

மற்றொரு சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர், புதுச்சேரி மூலக்குளம் பீச்சவீரன்பேட் ஆதித்யா அவென்யூ முதல் குறுக்கு தெருவில் உள்ள தீனதயாளன் வீடு, காரைக்கால் பட்டம்மாள் நகரில் உள்ள செயற்பொறியாளர் சிதம்பரநாதன் வீடு, காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலகங்களில் விடிய விடிய சோதனை நடத்தினர்.

சீகல்ஸ் ஓட்டலில், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு துவங்கிய விசாரணை நேற்று மதியம் 2:30 மணிக்கு முடிந்தது.

அதைத் தொடர்ந்து, தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், தனியார் கட்டுமான நிறுவன ஒப்பந்தாரர் மன்னார்குடி குளமுருகு ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் காரைக்கால் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லிசி முன்பு ஆஜர்படுத்தினர். மூவரையும், வரும் 26ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து மூவரும் காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமை பொறியாளர் அறைக்கு சீல்


நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வந்த சி.பி.ஐ., டி.எஸ்.பி., ஜெயசீலன் தலைமையிலான குழுவினர், புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக தலைமை பொறியாளர் அறையை சோதனையிட சென்றனர். விடுமுறை நாள் என்பதால், அலுவலர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால், தலைமை பொறியாளர் அலுவலக அறையை சி.பி.ஐ., அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

நேற்று மதியம் 2:00 மணிக்கு மீண்டும் தலைமை பொறியாளர் அலுவலகம் வந்த 7 பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள், சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து சோதனையில் ஈடுபட்டனர். மாலை 4:30 மணி வரை நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

2வது நாள் சோதனை


புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் நேற்று 2வது நாளாக சோதனை நடந்தது. காலை முதல் மதியம் வரை நடந்த சோதனையில், வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.

அனல் பறந்த அமைச்சர் அலுவலகம்


காரைக்கால் மற்றும் புதுச்சேரி பொதுப்பணித் துறை அலுவலகம், தலைமை பொறியாளர் வீடுகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தி கொண்டிருந்த நேரத்தில், நேற்று காலை புதுச்சேரி சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. பல அதிகாரிகள் அமைச்சர் அலுவலகம் வந்து சென்றவாறு இருந்தனர்.

பல லட்சம் சிக்கியது

சி.பி.ஐ., அதிகாரிகளின் 2 நாள் சோதனையில், லஞ்ச பணமாக ரூ. 25 லட்சம், காரைக்கால் கண்காணிப்பு பொறியாளர் வீட்டில் ரூ. 5 லட்சம், தீனதயாளன் வீட்டில் பல லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை சி.பி.ஐ., அதிகாரிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us