Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சட்டவிரோத பேனர்களால் மக்கள் அச்சம்

சட்டவிரோத பேனர்களால் மக்கள் அச்சம்

சட்டவிரோத பேனர்களால் மக்கள் அச்சம்

சட்டவிரோத பேனர்களால் மக்கள் அச்சம்

ADDED : ஜன 28, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரியில் சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்றும் விவகாரத்தில், தலைமைச் செயலர் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

மக்கள் உயிருக்கு ஆபத்து


புதுச்சேரியில் அனுமதி பெறாமலும், சட்ட விரோதமாகவும் பேனர்கள் தாறுமாறாக வைக்கப்பட்டு வருகிறது. இவை வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிப்பதால் தினந்தோறும் விபத்துகள் நடக்கிறது.

உயரமான இடங்களில் கட்டப்பட்டுள்ள பல பேனர்கள் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் அகற்றப்படாமல் உள்ளன. இவை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பலமிழந்து காற்றில் ஊசலாடி கொண்டுள்ளன.

இதுபோன்ற பேனர்கள் காற்று வேகமாக வீசும்போது வாகன ஓட்டிகளின் மீதோ, நடந்து செல்லும் பாதசாரிகள் மீதோ விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், மக்களின் உயிரை பற்றி புதுச்சேரியில் யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.

மறந்து போன கடமை


பேனர்களை அகற்ற வேண்டிய அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. பொதுப்பணித்துறை அல்லது நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான சாலைகளில் தான் பேனர்கள் வைக்கப்படுகின்றன. பேனர்களை அனுமதி இல்லாமல் வைக்கும்போது, பொதுப்பணித் துறையோ அல்லது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளோ நேரடியாக அகற்றலாம்.

பேனரை அகற்றியதற்கான செலவையும் அவற்றை வைத்தவர்களிடம் இருந்து வசூல் செய்யலாம்.

ஆனால், பேனர் அகற்றும் வேலையை அத்திபூத்தாற்போல் எப்போதாவது தான் பொதுப்பணித் துறையும், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளும் செய்கின்றன.

பெரும்பாலான நேரங்களில் பேனர் அகற்றும் விஷயத்தையே மறந்து விடுகின்றன. இதனால், பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான்.

என்ன செய்ய வேண்டும்?


சட்டவிரோத பேனர்களை அகற்றுவதற்கு ஒருங்கிணைப்பு தேவையாக உள்ளது.

பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, மாநில மற்றும் மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்பு கமிட்டிகள் ஆகியவை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். பேனர்களை அகற்றுவதற்காக தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும்.

சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்களை, இந்த குழுவினர் உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும். பாரபட்சம் பார்க்காமல் கடுமையான அபாராதமும் விதிக்க வேண்டும்.

சி.எஸ்., மேற்பார்வையில்...


பொதுமக்கள் நலன் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தலைமைச் செயலர் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி அரசு அதிகாரிகளின் தலைவராக உள்ள தலைமைச் செயலரின் நேரடி பார்வையில், பேனர் அகற்றும் குழுவினர் செயல்பட வேண்டும். உள்ளூர் அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை, தலைமைச் செயலர் நேரடியாக பிறப்பிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us