/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உள்ளாட்சி துறை அலுவலகம் முற்றுகை குப்பையை அகற்றாததால் எம்.எல்.ஏ., அதிரடி உள்ளாட்சி துறை அலுவலகம் முற்றுகை குப்பையை அகற்றாததால் எம்.எல்.ஏ., அதிரடி
உள்ளாட்சி துறை அலுவலகம் முற்றுகை குப்பையை அகற்றாததால் எம்.எல்.ஏ., அதிரடி
உள்ளாட்சி துறை அலுவலகம் முற்றுகை குப்பையை அகற்றாததால் எம்.எல்.ஏ., அதிரடி
உள்ளாட்சி துறை அலுவலகம் முற்றுகை குப்பையை அகற்றாததால் எம்.எல்.ஏ., அதிரடி
ADDED : ஜூலை 04, 2025 02:18 AM

புதுச்சேரி ; புதுச்சேரி நகர பகுதியில் குப்பைகளை அகற்றாததை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., தலைமையில் சமூக அமைப்பினர் உள்ளாட்சி துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி மாநிலத்தில் துப்புரவு பணி உள்ளாட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நிர்வாக சிக்கல் காரணமாக துப்புரவு பணியை கடந்த 10 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் நகரப்பகுதியான புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகளில் தினசரி 350 டன் அளவிற்கு குப்பை சேகரமாகிறது. இதனை அகற்றும் பணியை, கடந்த 2015ம் ஆண்டு முதல் ஸ்வச்சத் பாரத் நிறுவனம் செய்து வந்தது.
இந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனையொட்டி, அந்நிறுவனம் குப்பை சேகரிக்க வைத்த தொட்டி உள்ளிட்ட பொருட்களை கடந்த 30ம் தேதியே எடுத்து சென்றுவிட்டன.
ஸ்வச்சத் பாரத் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சி துறையால் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 'கிரின் வாரியர்' நிறுவனம், துப்புரவு பணியை கடந்த 1ம் தேதி முதல் துவங்காததால், வீதிகளில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை எம்.எல்.ஏ., நேரு, நேற்று நகர பகுதியை ஆய்வு செய்தார்.
வீதிகளில் குப்பை குவிந்து கிடந்ததை தொடர்ந்து, சமூக அமைப்பினருடன் புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, கமிஷனர் (பொ) சுரேஷ்ராஜனை சந்தித்து குப்பை அகற்றாதது ஏன் என கேள்வி எழுப்பினார். பின், அங்கிருந்தபடி உள்ளாட்சி துறை இயக்குநரை போனில் தொடர்பு கொண்டார். அவர் போனை எடுக்கவில்லை.
உடன் அனைவரும் உள்ளாட்சி துறை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, இயக்குநர் சக்திவேல் அலுவலகத்தில் இருந்தபடியே போனை எடுக்காததை கண்டித்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். மேலும், எந்த தகுதியும் இல்லாத நிறுவனத்திற்கு எப்படி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் சக்திவேல், கமிஷனர் சுரேஷ் ராஜன் ஆகியோர், புதிய ஒப்பந்த நிறுவனம் போதிய தளவாட பொருட்கள் மற்றும் ஊழியர்களை வைத்துள்ளது. பொருட்களையும், ஆட்களையும் பிரித்து அனுப்புவதில் தாமதமாகிவிட்டது.
இந்த குறைபாட்டை சரி செய்து, குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதனையேற்று போராட்டத்தை விளக்கி கொண்ட நேரு எம்.எல்.ஏ., 12 மணி நேரத்திற்குள் குப்பையை அகற்றாவிட்டால், நாளை (இன்று) குப்பையை உள்ளாட்சி துறை அலுவலகத்தில் கொட்டி போராட்டம் நடத்தப்படும் என, எச்சரித்துவிட்டு கலைந்து சென்றார்.