/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேளாண் திட்டங்கள் எளிதில் பெற விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல் வேளாண் திட்டங்கள் எளிதில் பெற விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
வேளாண் திட்டங்கள் எளிதில் பெற விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
வேளாண் திட்டங்கள் எளிதில் பெற விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
வேளாண் திட்டங்கள் எளிதில் பெற விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்
ADDED : மார் 26, 2025 03:56 AM
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கேள்விகளுக்கு, வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பதில் அளித்து பேசியதாவது;
அதிக மகசூல் தரக்கூடிய நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு பொது பிரிவினருக்கு (இரண்டு பருவம்) ஊக்க தொகை ரூ.5,000 இருந்து ரூ.6,000 ஆகவும், அட்டவணை பிரிவினருக்கு ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரம், பாரம்பரிய நெல் சாகுபடிக்கு பொது பிரிவினருக்கு (2 பருவம்) ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ. 9,000; அட்டவணை பிரிவினருக்கு ரூ. 16 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும்.
விவசாயிகள் மின் தேசிய வேளாண் விற்பனை சந்தை (இ-நாம்)யில் விளைபொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக மதகடிப்பட்டு மற்றும் கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் இ -நாமில் இணைக்கப்படும்.
விவசாயிகள் பல்வேறு வேளாண் திட்டங்களின் பயன் பெறவும், விவசாய கடன் பெற வசதியாக 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். கால்நடைத் துறையில் காலி பணியிடங்கள் அனைத்தும் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும்.
முதல்வரின் விவசாய நிலம் இல்லாத கால்நடை வளர்ப்போர் விபத்து காப்பீட்டு திட்டம், புதுச்சேரி அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்போர் விபத்தில் இறந்தால் ரூ. 5 லட்சமும் மற்றும் விபத்து மூலம் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ. 2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும்.
இரவு நேரங்களில், சாலைகளில் நாய்களால் ஏற்படும் விபத்தை தடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒளிரூட்டும் கழுத்து பட்டைகள் பொருத்தப்படும். அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்த ஆவணம் செய்யப்படும்.
நரம்பியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் மோட்டார் பொருத்தப்பட்ட முன்று சக்கர வண்டிகள் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் இறந்தால், அவர்களின் இறுதி சடங்கிற்கு வழங்கும் உதவித் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ. 1,000ல் இருந்து ரூ. 4,000 ஆகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ. 2,000ல் இருந்து ரூ. 5,000 ஆகவும், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,400ல் இருந்து ரூ.6,400 ஆக உயர்த்தப்படும்.
ஒரு மாற்றுத்திறனாளி மற்றொரு மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டால் வழங்கப்படும் ரூ. 2 லட்சம் உதவித்தொகை ரூ. 2.5 லட்சமாகவும், மாற்றுத்திறனாளி சாதாரண நபரை திருமணம் செய்து கொண்டால் வழங்கப்படும் ரூ. 1 லட்சம் நிதி உதவி ரூ. 1.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இளநிலை பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5000ல் இருந்து ரூ.8000 ஆகவும், முதுகலை மாணவர்களுக்கு ரூ.6,800ல் இருந்து ரூ.9,800 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஆதரவற்ற விதவை பெண் மகள் திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ. 40 ஆயிரமாகவும், மணப்பெண்ணின் பெற்றோருக்கு வழங்கும் நிதி உதவி ரூ. 35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஒன்று, இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெற்றோருக்கு அளிக்கும் நிதி உதவி ரூ. 50 ஆயிரமாகவும், ஏழை பெற்றோர்களின் குடும்பத்தில் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் ஒரே பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை ரூ. 40 ஆயிரமாகவும், விதவை மறுமணத்துக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தில் ரூ. 75 ஆயிரம் வழங்கப்படும்.
வாரத்திற்கு 6 முட்டைகள்
அனைத்து அங்கன்வாடி குழந்தைகள் வாரத்தில் 3 முட்டை, கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு 1 முட்டை வழங்கப்படுகிறது. வரும் காலத்தில் தினமும் 1 முட்டை வீதம் வாரம் 6 முட்டைகள் வழங்கப்படும்.
பால் உற்பத்தியை பெருக்க ஏற்கனவே கறவை பசு வைத்துள்ள விவசாயிகளுக்கு நுாறு சதவீத மானியத்தில் (ரூ. 60 ஆயிரம்) ஒரு கறவை பசு வழங்கப்படும். கூட்டுறவு சங்க உறுப்பினர் அல்லாத விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் கால்நடை மற்றும் கன்று தீவனம் வழங்கப்படும்.