Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுபான கடைகளின் உரிமத்தொகை.... உயர்ந்தது; ஆண்டிற்கு ரூ.90 கோடி திரட்ட இலக்கு

மதுபான கடைகளின் உரிமத்தொகை.... உயர்ந்தது; ஆண்டிற்கு ரூ.90 கோடி திரட்ட இலக்கு

மதுபான கடைகளின் உரிமத்தொகை.... உயர்ந்தது; ஆண்டிற்கு ரூ.90 கோடி திரட்ட இலக்கு

மதுபான கடைகளின் உரிமத்தொகை.... உயர்ந்தது; ஆண்டிற்கு ரூ.90 கோடி திரட்ட இலக்கு

ADDED : மே 31, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளின் உரிமத் தொகை மட்டுமின்றி, ஏற்றுமதி, இறக்குமதிக்கான கலால் வரியையும் அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.90 கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் சாராயம், கள்ளுக்கடைகள் மட்டுமின்றி பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட சீமை சரக்குகளை விற்கும் 558 மதுபான கடைகளும் உள்ளன.

இந்த மதுபான கடைகள் ஆண்டிற்குகொரு முறை உரிமம் தொகை செலுத்தி புதுப்பிக்க வேண்டும். உற்பத்திக்கேற்ப கலால் வரியை கட்ட வேண்டும். உரிமத் தொகையை 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புதுச்சேரி அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது. கடைசியாக பார்களுக்கான லைசென்ஸ் கட்டணம் கடந்த 2015ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. இதேபோல் ஏற்றுமதி, இறக்குமதிக்கான கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பீர் வகை மதுபானத்திற்கு கலால் வரி லிட்டருக்கு 3.50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ.எம்.எப்.எல்., வெளிநாட்டு மதுபானங்களுக்கு முன்பு லிட்டருக்கு 7 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்ததை தற்போது 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் இறக்குமதி கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி


இதேபோல் புதுச்சேரியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பீர் வகைகளுக்கு முன்பு லிட்டருக்கு 75 பைசா வசூலிக்கப்பட்டது. இது காலத்துகேற்ப 5 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பிராந்தி, விஸ்கி ஐ.எம்.எப்.எல்., மதுபான வகைளுக்கு தற்போது 1 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது 7 ரூபாயாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது கடந்த 2001ம் ஆண்டிற்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.

லைசென்ஸ் தொகை


ஆண்டிற்கு 20 லட்சம் மதுபான பாட்டீல்களை உற்பத்தி செய்யும் ஐ.எம்.எப்.எல்., மதுபான தொழிற்சாலை ஆண்டிற்கு 40 லட்சம் ரூபாய் லைசென்ஸ் தொகை கட்ட வேண்டும். இதுதவிர, ஒவ்வொரு கூடுதல் 1 லட்சம் மதுபான பாட்டீல்கள் உற்பத்திக்கும் அந்த தொழிற்சாலைகள் ஆண்டிற்கு 2 லட்சம் ரூபாய் லைசென்ஸ் தொகை செலுத்த வேண்டும்.

மொத்த கடைகள்


எப்.எல்..,-1 எனப்படும் மொத்த கொள்முதல் மதுபான கடைகளுக்கு தற்போது ஆண்டிற்கு செலுத்தும் லைசென்ஸ் கட்டணம் ரூ.15 லட்சத்தில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எப்.எல்..,-1 சில்லறை கொள்முதல் மதுபான கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணம் ஆண்டிற்கு 7 லட்சம் ரூபாயில் இருந்து 14 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எப்.எல்.,-1 சில்லறை கடைகளில் மதுபானங்களை பரிமாற அனுமதி இல்லை.

சில்லறை கடைகள்


மதுபானங்கள் பரிமாறப்படும் எப்.எல்.,-2 எனப்படும் சில்லறை பார்களுக்கு ஆண்டிற்கு தற்போது வசூலிக்கப்படும் லைசென்ஸ் கட்டணம் 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்கள் பரிமாறாமல் மதுபாட்டீல்கள் மட்டும் விற்பனை செய்யப்படும் எப்.எல்.,-2 மதுபான கடைகளுக்கு ஆண்டிற்கு தற்போது வசூலிக்கப்படும் லைசென்ஸ் கட்டணம் 7 லட்சம் ரூபாயில் இருந்து 14 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பார்கள்


சுற்றுலா பிரிவின் கீழ் ஓட்டல், ரெஸ்ட்ரண்ட்டுகளில் விற்பனை செய்யப்படும் எப்.எல்., -2 மதுபான கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணம் ஆண்டிற்கு 6 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பீர் தொழிற்சாலைகள்


புதுச்சேரியில் ஆண்டிற்கு 2 கோடி லிட்டர் பீர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கான லைசென்ஸ் கட்டணம் ஆண்டிற்கு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 2 கோடி மதுபாட்டில்களை தாண்டி உற்பத்தி செய்தால் ஒவ்வொரு லிட்டருக்கும் கூடுதலாக 1 ரூபாய் கலால் வரி செலுத்த வேண்டும் என, கலால் துறை அறிவித்துள்ளது.

கவர்னர் உத்தரவின்படி லைசென்ஸ் கட்டணம், ஏற்றுமதி - இறக்குமதி வரி உயர்வை கலால் துறை அறிவித்துள்ளது. இந்த உயர்வு மூலம் ஆண்டிற்கு 90 கோடி ரூபாய் புதுச்சேரி அரசுக்கு கிடைக்கும்.

ஒரு நாள் அனுமதி 10 ஆயிரமாக எகிறியது


புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ காலங்களில் ஒரு நாளைக்கு மட்டும் மதுபானங்களை விற்க கலால்துறை சிறப்பு அனுமதி தருகிறது. இதற்காக 5 ஆயிரம் ரூபாய் தற்போது வசூலித்து வருகிறது. இனி இந்த சிறப்பு அனுமதி கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us