Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/'கண்ணன் திருவடி எண்ணுக மனமே' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

'கண்ணன் திருவடி எண்ணுக மனமே' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

'கண்ணன் திருவடி எண்ணுக மனமே' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

'கண்ணன் திருவடி எண்ணுக மனமே' : ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

ADDED : ஜன 03, 2024 06:30 AM


Google News
புதுச்சேரி : முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம், உபன்யாசம் செய்தார்.

திருப்பாவையின், 17ம் பாசுரத்தில் எம்பெருமான் நந்தகோபாலா என்றருளியுள்ளதால், எம்பெருமானாகிய கண்ணனையே ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

பாசுரத்தில் வரும், 'சோறு' என்ற சொல், உணவைக் குறிக்கும். சோறு அளிப்பவன், முக்தியை அளிப்பவன் நந்தகோபனின் குமரன் 'நந்தகோபாலன் கண்ணன்' என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆண்டாள் அறம் செய்யும் நந்தகோபன் என்று அருளினாள் என்பதை ஆழ்ந்து பொருள் கொள்ளல் வேண்டும்.

தகுநிலை அறிந்து, கேட்டவற்றோடு கேட்காமல் விட்ட தேவையான பொருட்களையும் சேர்த்து, எவ்வித பலனும் எதிர் நோக்காமல் உவப்புடன் அளிப்பதே அறம்.

வேரில் வாட்டம் வந்தால் கொழுந்து தானே முதலில் வாடும்.

அதேபோல்ஆயர் குலப் பெண்களுக்கு சிறு துன்பம் வந்தாலும், முதலில் வாடுபவள் ஆயர் குலக் கொழுந்தான யசோதையே!கோபியரின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும் திறம் படைத்தவள். அதனாலேயே, அவளை கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து என்றும், குல விளக்கு என்றும் ஆண்டாள் போற்றி உள்ளாள்.

தேவகியின் திருவயிற்றில் கண்ணனுக்கு முன் ஏற்பட்ட பலராமனின் திருவடி சம்பந்தமே, கண்ணன் இப்பூமியில் அவதரித்து, கம்சனை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதில் ஒரு முக்கியக் காரணமாய் அமைந்தது! எனவே தான் செம்பொற் கழலடி செல்வா பலதேவா என்று கொண்டாடினாள் ஆண்டாள்.

கண்ணா, பலதேவா, நாங்கள் பல நிலைகள் கடந்து, உங்கள் தாய் தந்தையரின் ஆசி பெற்று, உந்தன் திருக்கோவிலானதிருமாளிகைக்கு வந்துள்ளோம். இனியும் உறங்காது, எங்களுக்கு அருள்வாய் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.மாயங்கள் பல புரிந்து சேதனர்களைக் காக்கும் மாதவனான கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்று அழைத்து ஆண்டாள் அருளியவற்றை ஓர்ந்து தெளிந்து உய்வோம்.

இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us