Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரதமர் சூரிய மின்னொளி திட்டத்தை செயல்படுத்தினால் 20 ஆண்டிற்கு கட்டணமின்றி இலவச மின்சாரம் பெறலாம்

பிரதமர் சூரிய மின்னொளி திட்டத்தை செயல்படுத்தினால் 20 ஆண்டிற்கு கட்டணமின்றி இலவச மின்சாரம் பெறலாம்

பிரதமர் சூரிய மின்னொளி திட்டத்தை செயல்படுத்தினால் 20 ஆண்டிற்கு கட்டணமின்றி இலவச மின்சாரம் பெறலாம்

பிரதமர் சூரிய மின்னொளி திட்டத்தை செயல்படுத்தினால் 20 ஆண்டிற்கு கட்டணமின்றி இலவச மின்சாரம் பெறலாம்

ADDED : மே 29, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: வீடுகளில் சிறிய முதலீட்டில் பிரதமரின் சூரிய மின் ஒளி திட்டத்தை செயல்படுத்தினால், 20 ஆண்டுகள் கட்டணமின்றி மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்தலாம்.

இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரம் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தியை பெருக்க அனல் மின் நிலையங்களில் நிலக்கரி உள்ளிட்ட எரிபொருளை எரிப்பதாலும், அணு மின்நிலையங்களில் அணுவை பிளப்பதாலும் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது.

இதனை தவிர்த்திட, ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வகையில், ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டில் பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தில் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பேனல் அமைக்க ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட் மின் உற்பத்தி திறனுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் திறனுக்கு மொத்தம் ரூ.78 ஆயிரம் மானியம் வழங்குகிறது. மேலும், இந்த சூரிய மின் சக்தி திட்டம் அமைக்க தமிழகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 6.75 சதவீத வட்டியில் கடனுதவி வழங்குகிறது.

இத்திட்டங்களை பயன்படுத்தி வீடுகளில் சோலார் பேனல் அமைத்தால், அதனுடைய செலவுத் தொகையை அதிகப்பட்சம் 5 ஆண்டுகளில் எடுத்துவிடலாம். 6ம் ஆண்டு முதல் மின்சாரம் முற்றிலும் இலவசம்.

தமிழகத்தில் நடுத்தர குடும்பத்திற்கு (ஒரு ஏ.சி., வாசிங் மிஷன், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி, 2 மின்விசிறி, 5 டியூப் லைட், ஒரு மோட்டார் பயன்படுத்தும் வீட்டிற்கு) அதாவது 2 மாதத்திற்கு 600 யூனிட் மின்சாரம் போதுமானது. இதற்கு மின் கட்டணம் ரூ.2,880 செலுத்த வேண்டும். இது நடுத்தர குடும்பத்திற்கு மிகப் பெரிய சுமையாக இருக்கும்.

இப்பிரச்னையை சமாளிக்க, பிரதமரின் சூரிய மின்னொளி திட்டத்தை பயன்படுத்தி வீட்டு மாடியில் 160 சதர அடி பரப்பளவில் 2 கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் போதும். இதற்கு மொத்த செலவு ரூ.1.40 லட்சம். மானியம் ரூ.60 ஆயிரம் கிடைக்கும். மீதம் நமது முதலீடு, ரூ.80 ஆயிரம் மட்டுமே. இதனையும் நாம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மிககுறைந்த 6.75 சதவீத வட்டியில் நீண்டகால தவணையில் கடன் பெறலாம். இந்த கடன் தொகையை, சோலார் பேனல் மூலம் நாம் பெறும் மின்சாரத்திற்கான கட்டண தொகை மூலம் 5 ஆண்டுகளில் செலுத்தி விடலாம்.

அதாவது 2 மாதத்திற்கு நாமக்கு தேவையான 600 யூனிட் மின்சாரத்தை சோலார் பேனல் மூலம் பெற்றுவிடுவதால், இதற்கான கட்டணம் ரூ.2,880 மிச்சமாகிறது. இருப்பினும், நாம் மின் இணைப்பு வைத்துள்ளதால், மின்பாதை பயன்பாட்டிற்கான கட்டணம் இரண்டு மாதத்திற்கு ரூ.192 மட்டும் செலுத்த வேண்டும். அதுபோக மின்கட்டணம் ரூ.2,688 நமக்கு மிச்சமாகும். இவ்வாறு ஆண்டிற்கு ரூ.16,128 வீதம் 5 ஆண்டுகளில் சோலார் பேனல் அமைத்த மொத்த முதலீட்டு கடனை அடைத்து விடலாம். ஆறாம் ஆண்டு முதல் அடுத்த 20 ஆண்டுகளுக்கு எவ்வித கட்டணமின்றி, மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

மேலும், மத்திய மின் ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 4.73 சதவீதம் மின்கட்டணம் உயரும். இதனை கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் சோலார் பேனல் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்பது நிதர்சனம்.

சோலார் பேனல் அமைப்பதன் மூலம், சமூகத்தின் சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுப்பதில் நாமும் ஒரு அங்கம் என்ற பெருமை கொள்வோம். மேலும், நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம், மின்துறைக்கு ஏற்படும் மின் இழப்பு தடுப்பதுடன், மின்துறைக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் முற்றிலும் தவிர்க்கலாம்.

அப்புறம் என்னங்க.. நீங்களும் சீக்கிரமாக பிரதமரின் சூரிய ஒளி திட்டத்திற்கு மாறுங்க.. மாத பட்ஜெட்டை சேமிக்க, pmsuryaghar.gov.in இணைதளத்தில் இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க...

மேலும் விபரங்களுக்கு

கடலுார் மாவட்டத்தினர் - 94458 55922 (மாவட்ட மின் துறை பி.ஆர்.ஓ.,) விழுப்புரம் மாவட்டத்தினர் - 94458 55750 (மின்துறை செயற்பொறியாளர்), கள்ளக்குறிச்சி மாவட்டத்தினர் - 94990 50377 (உதவி செயற்பொறியாளர்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.-----------





      Our Apps Available On




      Dinamalar

      Follow us