Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடுத்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பான குடிநீர் கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

அடுத்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பான குடிநீர் கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

அடுத்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பான குடிநீர் கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

அடுத்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பான குடிநீர் கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

ADDED : ஜூன் 17, 2025 08:02 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரியின் நிலத்தடியில் டி.டி.எஸ்., அதிகமாக உள்ள சூழ்நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான பணிகளை அரசு துவக்கியுள்ளது என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்ற விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:

புதுச்சேரி புவியியல் ரீதியாக ஒரு சிறிய மாநிலமாக இருந்தாலும், இந்தியாவின் சுகாதார சுற்றுலாவிற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக முன்னேறி வருகிறது. மேலும், தென் ஆசியாவில் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்விக்கான மையமாக உருவெடுத்துள்ளது.

சுகாதார சுற்றுலாவின் வாய்ப்புகளை உணர்ந்து, புதுச்சேரி அரசு இப்போது தடையற்ற விமான சேவை மற்றும் மேம்பட்ட விருந்தோம்பல் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றோம்.

பிரதமர் மோடி 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். புதுச்சேரியை பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றும் பணியை துவங்கியுள்ளோம். இந்த பணியில், ஜிப்மர் போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. மாசுபாடு, காலநிலை மாற்றம், காடு அழிப்பு மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவை சுற்றுச்சூழல் பிரச்னைகள் மட்டுமல்ல அவை பொது சுகாதார அவசரநிலைகள் என்பதைப் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் துாதர்களாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பொது போக்குவரத்தைப் பயன்படுத்தல், ஒரு மரத்தை நடுதல், தண்ணீரை சேமித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், காலநிலை நடவடிக்கைக்கு குரல் கொடுக்க வேண்டும். தேச கட்டுமானத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

தேசபக்தி என்பது கொடியை வணங்குவது மட்டுமல்ல ஒரு மரத்தை நடுவது, ஒரு நதியைப் பாதுகாப்பது, உங்கள் நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதும்கூட என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புதுச்சேரியின் நிலத்தடியில் டி.டி.எஸ்., அதிகமாக உள்ளது. சில இடங்களில் 2000 டி.டி.எஸ்., உள்ளது. இச்சூழ்நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பான குடிநீர் தருவதற்கான பணிகளை அரசு துவக்கியுள்ளது. இவ்வாறு கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

புதுச்சேரி தந்துள்ளது

கவர்னர் கைலாஷ்நாதன் பேசும்போது, ஜிப்மர் இப்போது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமாக வளர்ந்துள்ளது. இது புதுச்சேரியின் பெருமை. ஜிப்மர் உலகளாவிய அங்கீகாரத்தைக் புதுச்சேரிக்கு கொண்டு வந்துள்ளது. புதுச்சேரி மட்டுமின்றி அருகிலுள்ள தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களின் பொதுமக்களின் பொது சுகாதாரம் மற்றும் மனிதநேயத்திற்கான அர்ப்பணிப்பு மூலம் நம்பிக்கையின் சின்னமாகவும் விளங்குகின்றது. சமூக சுகாதார சேவைகளில் ஜிப்மரின் பங்கு, புதுச்சேரியை உலகளாவிய மேம்பட்ட மருத்துவ சேவைகளின் வரைபடத்தில் நிலைநிறுத்தியுள்ளது. புதுச்சேரியின் நிர்வாகியாக, ஜிப்மரின் சாதனைகளில் நான் பெருமை கொள்கிறேன் என பாராட்டினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us