/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமைப்பு சாரா நல சங்கம் கலைப்பு நல வாரியமாக மாற்ற அரசாணை அமைப்பு சாரா நல சங்கம் கலைப்பு நல வாரியமாக மாற்ற அரசாணை
அமைப்பு சாரா நல சங்கம் கலைப்பு நல வாரியமாக மாற்ற அரசாணை
அமைப்பு சாரா நல சங்கம் கலைப்பு நல வாரியமாக மாற்ற அரசாணை
அமைப்பு சாரா நல சங்கம் கலைப்பு நல வாரியமாக மாற்ற அரசாணை
ADDED : மே 25, 2025 04:52 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அமைப்பு சாரா நல சங்கத்தை கலைத்துவிட்டு நல வாரியமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சாலையோர சிறு கடைகள், தையல், மெக்கானிக், ஆட்டோ, டாக்சி டிரைவர், சுமை துாக்குவோர், பாத்திரம் செய்தல், சமையலர், வீட்டு வேலை என பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இ.எஸ்.ஐ., பலன்கள் கிடையாது. வேலைக்கு சென்றால் மட்டுமே சம்பளம் என்ற நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, விபத்தில் சிக்கினாலோ அந்த குடும்பம் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறது.
இதனால், முன்னாள் முதல்வர் சண்முகம் ஆலோசனையின்படி, 2001ல் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் துவங்கப்பட்டது.
இதன் உறுப்பினர்கள் 'பீம யோஜனா' என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதனால், உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.30 ஆயிரம், விபத்தில் இறந்தால் ரூ.75 ஆயிரம் இழப்பீடாக வழங்கப் பட்டது. மாநில அரசு சார்பில் பேறுகால உதவித்தொகை, சங்க உறுப்பினரின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, ஈமச்சடங்கு தொகை மற்றும் பண்டிகை கால பரிசுக்கூப்பன் வழங்கப்பட்டு வந்தது.
மத்தியில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஆயுள் காப்பீட்டு சலுகை நிறுத்தப்பட்டது. அதனால், சங்க உறுப்பினர்கள், தீபாவளி பரிசு கூப்பன் தவிர்த்த அரசின் பிற நலத்திட்ட உதவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், நலவாரியம் அமைக்க வேண்டி அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதனையொட்டி கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய காங்., அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து, அதற்கான வழிகாட்டு நெறிகளுடன் அரசாணை வெளியிடப்பட்டது.
இருப்பினும் அமைப்பு சாரா நல வாரியம் செயல்பாட்டிற்கு வராமல் அமைப்பு சாரா நல சங்கமும் இயங்கி வந்தது. நல வாரியத்தை செயல்படுத்த கோரி, ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்த பேரணியை அறிவித்தன.
அதை தொடர்ந்து கலெக்டர் குலோத்துங்கனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அறிவித்தபடி அமைப்பு சாரா நல வாரியம் செயல்படுத்தப்படும் என, அறிவித்தார். அதையேற்று ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
கலெக்டர் உறுதியளித்தபடி அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தை கலைத்துவிட்டு மாநில நல வாரியம் அமைக்க தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.