Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலி உயில் தயாரித்து நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் 'திடுக்'

போலி உயில் தயாரித்து நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் 'திடுக்'

போலி உயில் தயாரித்து நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் 'திடுக்'

போலி உயில் தயாரித்து நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் 'திடுக்'

ADDED : மார் 21, 2025 04:44 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: மூலக்குளத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்திற்கு போலி உயில் தயாரித்து மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, கலவை சுப்புராய செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு, மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை எதிரே 5 லட்சம் சதுரடி நிலம் உள்ளது. ரங்கநாதனுக்கு வாரிசு இல்லை. இதனால், அவரது வீட்டில் வேலை செய்த திண்டிவனம் முளைச்சூர் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள், 50; என்பவர், ரங்கநாதன் தனக்கு சொந்தமான நிலத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான, 50 ஆயிரம் சதுரடி நிலத்தை மட்டும் தனக்கு உயில் எழுதி கொடுத்ததாக, போலி உயில் தயாரித்துள்ளார்.

அதன் மூலம் சாரம் அய்யப்பன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் முத்துக்குமரன், 50; பவர் எழுதி பெற்றார்.

அதனை, லாஸ்பேட்டை அசோக் நகர், கவிக்குயில் வீதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம், ரூ. 4.5 கோடிக்கு புரோக்கர் முத்துக்குமரன் விலை பேசி, ரூ. 30 லட்சம் முன்பணம் பெற்றுள்ளார்.

அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்ய சென்றபோது, நிலம் ரங்கநாதன் பெயரில் இருந்ததால் பதிவு செய்ய உழவர்கரை சப் ரிஜிஸ்டர் அலுவலகம் மறுத்தது.

இது குறித்து பலராமன் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் மோசடி வழக்கு பதிந்து, போலி உயில் தயாரித்த முனியம்மாளை கடந்த 7 ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரியல் எஸ்டேட் புரோக்கர் முத்துக்குமரனை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, போலி உயில் வழக்கில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டறிய சிறையில் அடைக்கப்பட்ட முனியம்மாளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த 2 தினங்களுக்கு முன் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அதில், முனியம்மாள், முத்துக்குமார் ஆகியோருடன் நெல்லிதோப்பு, சவரிபடையாட்சி வீதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மற்றும் சிலர் சேர்ந்து போலி உயில் பத்திரம் தயார் செய்ததும், அதனை வைத்து நிலத்தை விற்க முயற்சி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, முனியம்மாள் அளித்த வாக்குமூலத்தின்படி, வழக்கில் தொடர்புடைய ஆரோக்கியராஜ் உள்ளிட்ட மேலும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us