ADDED : ஜன 04, 2024 03:27 AM
புதுச்சேரி: ஊர்க்காவல் படை வீரர், சக ஊர் காவல் படை வீரருடன் ஸ்டேஷனிலேயே தகராறில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் விடுமுறையில் இருந்தபோது, தனது காரை ஓட்டி சென்றார்.
அப்போது, இவரது கார், கூனிச்சம்பட்டு பகுதியில் எதிரே வந்த பைக் மீது மோதுவது போல் சென்றது.
இதை பைக் வந்த நபர் கண்டித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரும் புகார் அளிக்க திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். அங்கு பைக்கில் வந்த நபரும், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
பின், இருவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போது, கார் ஓட்டி வந்த ஊர் காவல் படை வீரர், சக ஊர்காவல் படை வீரரை, சப் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, தனது நண்பர்களுடன் மணலிப்பட்டு சாராயக்கடைக்கு சென்று ஊழியரிடம் தகராறு செய்ததுடன், அதே காரில் தமிழக பகுதியான திருவக்கரைக்கு சென்றபோது கார், மின் கம்பத்தில் மோதி விபத்துள்ளானது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் புதுச்சேரி போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.