/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபையில் இருந்து காங்.,- தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றம் சட்டசபையில் இருந்து காங்.,- தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றம்
சட்டசபையில் இருந்து காங்.,- தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றம்
சட்டசபையில் இருந்து காங்.,- தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றம்
சட்டசபையில் இருந்து காங்.,- தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றம்
ADDED : மார் 25, 2025 04:07 AM

புதுச்சேரி: பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி சட்டசபை மைய மண்டபத்தில் தர்ணாவில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையிலான தி.மு.க.,- காங்., எம்.எல்.ஏ.,க்கள் குண்டு கட்டாக துாக்கி வெளியேற்றப்பட்டனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்பட 3 பேரை சி.பி.ஐ., கைது செய்து சிறையில் அடைத்த விவகாரம் நேற்று சட்டசபையில் பூதாகரமாக எதிரொலித்தது.
சட்டசபை காலை 9.30 மணிக்கு கூடியதும், சபாநாயகர் செல்வம், கேள்வி நேர அலுவலை வாசித்தார். அப்போது, எழுந்த எதிர்கட்சித் தலைவர் சிவா, தலைமை செயலர் அந்தஸ்தில் உள்ள தலைமை பொறியாளர் சி.பி.ஐ.,யால் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் புதுச்சேரிக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே கேள்வி நேரத்தினை ஒத்திவைத்துவிட்டு, இவ்விவகாரத்தை சபையில் விவாதிக்க வேண்டும். இப்பிரச்னக்கு பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
சபாநாயகர் செல்வம்: கேள்வி நேரத்துக்கு பிறகு இதுபற்றி கண்டிப்பாக பேசலாம். கேள்வி நேரத்தை ஒதுக்கிவிட்டு பேச பார்லிமெண்ட், சட்டசபை விதிகளில் இடமில்லை. இதுதொடர்பாக பேச நானே அனுமதி வழங்குகிறேன்.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா: இந்த சி.பி.ஐ., விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. மக்களுக்கு என்ன பதில் கூறப் போகிறது. முக்கியமான பொதுப்பணித்துறை பூட்டப்பட்டுள்ளது. மக்கள், ஊழியர்களால் அத்துறைக்கு செல்ல முடியவில்லை. எங்களுடைய கேள்விகளுக்கு எப்படி உங்களால் பதில் பெற்று சொல்ல முடியும். இந்த முக்கியமான இப்பிரச்னையை இப்போதே எடுத்து விவாதிக்க வேண்டும்.
சபாநாயகர்: முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சரும் பதில் தருவார்கள். கேள்வி நேரத்துக்கு பின் இதனை பற்றி கண்டிப்பாக பேசலாம்.
அதை ஏற்க மறுத்த எதிர்கட்சித்தலைவர் சிவா, சபாநாயகர் இருக்கை அருகே சென்றார். அவருடன் தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,க்களும் சென்று, சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து, சபைக் காவலர்கள், எதிர்க்கட்சி தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று வெளியேற்றினர். பிற எம்.எல்.ஏ.,க்கள் அவர்களாகவே எழுந்து பின்தொடர்ந்து வெளியேறினர்.
வெளிநடப்பு செய்திருந்தால் உடனடியாக மீண்டும் சபைக்கு எதிர்கட்சிகள் வந்திருக்க முடியும். ஆனால் சபாநாயகர் உத்தரவிட்டு, வெளியேற்றியதால் கேள்வி நேரத்தின்போது தி.மு.க.,-காங்., எம்.எல்.ஏ.,க்கள் சபையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், 10.40 மணிக்கு தாமதமாக சபைக்கு வந்த காரைக்கால் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாகதியாகராஜன் இது தொடர்பாக சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர்.
நாஜிம் (தி.மு.க.,): தலைமை பொறியாளர் கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க கோரியவர்களை, வெளியேற்றியது சரியல்ல. அவர்களை மீண்டும் சபைக்கு அழைத்து பேச அனுமதிக்க வேண்டும்.
சபாநாயகர்: அவர்கள் சபை மரபுகளை மீறி அநாகரீகமாக நடந்து கொண்டனர். சி.பி.ஐ., கைதுக்கு மத்திய அரசுதான் பதில் கூற வேண்டும். எதிர்கட்சித் தலைவருக்கு அது தெரியும். ஆனால் நாடகம் ஆடுகிறார். சி.பி.ஐ., பற்றி பேச நமக்கு என்ன அதிகாரம் உள்ளது. அதை அனுமதிக்க முடியாது என கூறியதை ஏற்காததால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாகதியாகராஜன்: நாடே திரும்பி பார்க்கும் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும்.
ஆளும் கட்சி-எதிர்கட்சி மோதல்:
அப்போது பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், அசோக்பாபு, ஜான்குமார், ரிச்சர்டு, வெங்கடேசன், ராமலிங்கம், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர், ஆறுமுகம் ஆகியோர் எழுந்து, அதிகாரி செய்த தவறுக்கு, அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என எப்படி கூறலாம்? தமிழகத்தில் அமைச்சர் கைது செய்யப்பட்டார். அதற்கு நாடே திரும்பி பார்த்ததா.
இப்போது வழக்கில் இருப்பவர்கள்கூட அமைச்சர்களாக தொடர்கின்றனர் என்றனர். அதற்கு, நாஜிம், நாகதியாகராஜன் எதிர்ப்பு தெரிவிக்கவே, சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.
அமைச்சர் நமச்சிவாயம்: நீங்கள் விவரம் தெரியாமல் பேசக்கூடாது. சபாநாயகர் இந்த விவாதம் தொடர்பாக பேச அனுமதிக்க மாட்டேன் என கூறவில்லை. கேள்வி நேரத்துக்கு பின் அனுமதி தருவதாக கூறினார். அதிகாரி மீது குற்றம்தான் சாட்டப்பட்டுள்ளது. உண்மை பிறகுதான் தெரியும். அதற்குள் அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டுமா. இதில் அரசியல் செய்ய வேண்டுமா. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால்தான் வெளியேற்றப்பட்டனர்.
நாஜிம்: பிற மாநிலம் போல இல்லாமல் புதுச்சேரியில் சபை மாண்போடு நடக்கிறது, அது தொடர வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: குற்றம் சாட்டப்பட்ட தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளார்களா..அதைப்பற்றி இங்கு பேசலாமா? 2ஜி வழக்கு பற்றி பேசலாமா? அதிகாரி செய்த தவறுக்கு அமைச்சர் எப்படி பொறுப்பேற்க முடியும். இது அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி.
அமைச்சருக்கு ஆதரவாக என்.ஆர்.காங்.,-பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து பேசினர். இதையடுத்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், நாஜிம், நாகதியாகராஜன் ஆகியோரும், சபையில் சி.பி.ஐ., வழக்கு தொடர்பாக பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.