Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம் புதுச்சேரியில் ரூ.3 லட்சமாக உயர்வு; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம் புதுச்சேரியில் ரூ.3 லட்சமாக உயர்வு; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம் புதுச்சேரியில் ரூ.3 லட்சமாக உயர்வு; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம் புதுச்சேரியில் ரூ.3 லட்சமாக உயர்வு; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

ADDED : மார் 22, 2025 07:27 AM


Google News
புதுச்சேரி : விபத்தில் தலை, முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள் சிகிச்சை பெற ரூ. 3 லட்சம் நிதியுதவி தரப்படும் என, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மத்திய அரசு, சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. புதுச்சேரியில் இத்திடம் நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.

மத்திய அரசு ரூ.1.50 லட்சத்தில் துவங்கியுள்ள இத்திட்டத்திற்கு புதுச்சேரியில் ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சை பெற மத்திய அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தில், ரூ.1.50 லட்சம் அளவிற்கு, ஒரு வாரம் மருத்துவமனையில் உள்நோயாளியாக இலவச சிகிச்சை பெறலாம். இத்திட்டம் புதுச்சேரியிலும் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நல்ல திட்டம். அதே நேரத்தில், விபத்தில் தலை, தண்டுவடத்தில் காயமடைந்தவர்களுக்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும். விபத்தில் சிக்கியவர்கள் மேல் சிகிச்சைக்கு வெளியூர் சென்றால் அப்போது இந்த நிதி போதாது. கூடுதலாக செலவாகும். இது பொருளாதார ரீதியாக குடும்பங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, விபத்தில் தலை, முதுகு தண்டில் அடிப்பட்டு சிகிச்சைக்கு சென்றால் மத்திய அரசு திட்டத்தோடு, புதுச்சேரி அரசின் மாநில நிதி ரூ.1.50 லட்சம் இணைத்து ரூ. 3 லட்சம் வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்படும் அனைவருக்கும் பாகுபாடின்றி இந்த நிதி வழங்கப்படும்' என்றார்.

முதல்வரின் அறிவிப்பை, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை


விபத்துக்களில் சிக்குபவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பொதுமக்கள் தயங்குகின்றனர். போலீசை கண்டு அஞ்சுகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

பொதுமக்களிடம் போலீசார் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என, ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்தில் சிக்கியர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும்.

புதுச்சேரியில் விபத்தில் சிக்குபவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us