/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாரதியார், பாரதிதாசன் வீடுகளை புனரமைக்க... முடிவு; ரூ.1 கோடி செலவில் புதுபொலிவு பெறுகிறதுபாரதியார், பாரதிதாசன் வீடுகளை புனரமைக்க... முடிவு; ரூ.1 கோடி செலவில் புதுபொலிவு பெறுகிறது
பாரதியார், பாரதிதாசன் வீடுகளை புனரமைக்க... முடிவு; ரூ.1 கோடி செலவில் புதுபொலிவு பெறுகிறது
பாரதியார், பாரதிதாசன் வீடுகளை புனரமைக்க... முடிவு; ரூ.1 கோடி செலவில் புதுபொலிவு பெறுகிறது
பாரதியார், பாரதிதாசன் வீடுகளை புனரமைக்க... முடிவு; ரூ.1 கோடி செலவில் புதுபொலிவு பெறுகிறது
ADDED : ஜூன் 08, 2024 04:49 AM

புதுச்சேரி : புதுச்சேரி மண்ணிற்கு பெருமை சேர்க்கும் கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த இல்லங்களை 1 கோடி ரூபாய் செலவில் புனரமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி வரலாற்றுடன் தொடர்புடைய தெருக்களில் ஒன்று ஈஸ்வரன் கோவில் தெரு. இங்கு தான், முண்டாசுக் கவிஞன் பாரதியின் வீடு உள்ளது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இந்த வீட்டிலிருந்தபடி பல அரிய படைப்புகளைத் தந்தார் பாரதி. தற்போது, அவரது நினைவுகளையும் படைப்புகளையும் சுமந்துகொண்டு அருங்காட்சியகமாக நிற்கிறது அவர் வாழ்ந்த வீடு.
இதேபோல், புதுச்சேரியில் தரிசிக்கப்பட வேண்டி யவைகளில் ஒன்றுதான் 'புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வசித்த இல்லம். இது புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ளது. தற்போது அது பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், ஆய்வு மையம் என்ற பெயரில் கம்பீரமாக உள்ளது.
புதுச்சேரி மண்ணிற்கு பெருமை சேர்க்கும் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த இல்லங்களை 1 கோடி ரூபாய் செலவில் புனரமைக்க கலை பண்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான செயல் திட்டங்களை உருவாக்க பொதுப்பணித் துறை வாயிலாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களில் இந்த புனரமைப்பு பணிகள் துவங்க திட்டமிட்டுள்ளது. இரண்டு இல்லங்களிலும் பல இடங்களில் தண்ணீர் கசிகிறது. சிமென்ட் காரைகளும் பலவீனமாக உள்ளன. இதையடுத்து இவ்விரு இல்லங்களை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதியார் இல்ல பின்னணி
பாரதியார் வாழ்ந்த வீடு, விடுதலைப் போராட்டத்தின் போது பிரான்சின் வசமிருந்தது புதுச்சேரி. அந்தக் காலகட்டத்தில் 1908ல் இருந்து 1910 வரை பாரதியார் புதுச்சேரி வீட்டில் வசித்தார்.
இங்கிருந்து தான், மக்களைத் தட்டி எழுப்பிய பல படைப்புகளை அவர் தந்தார். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்டவைகளையும் இங்கிருந்தபோது தான் எழுதினார்.
கவிக்குயில் வாழ்ந்த இந்த இல்லத்தை புதுச்சேரி அரசு 1972ம் ஆண்டு அரசுடமை ஆக்கியது. அப்போதைய புதுச்சேரி முதல்வர் பாரூக் தலைமையில் கவர்னர் சேத்திலால் 11.12.1972ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிட்டார்.
அதை தொடர்ந்து அரிய பொக்கிஷங்களாக இப்போது இருக்கும் இந்த வீட்டை கடந்த 1984ம் ஆண்டு முதல் அருங்காட்சியகமாகவும் ஆய்வுமையமாகவும் அரசு பராமரித்து வருகிறது.
பாரதிதாசன் இல்லம்
கடந்த 1900ம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த வீட்டில் சுப்புரத்தினம் என்ற இயற் பெயரைக் கொண்ட பாரதிதாசன் 1945ல் குடியேறினார். இங்கு 1964ம் ஆண்டு வரை வாழ்ந்தார். பாரதியின் மீதுள்ள பேரன்பால் பாரதிதாசனாக அவதரித்தார். புதுச்சேரி சுதந்திர போரிலும் அவரது பங்கு நிலைத்துள்ளது.
பாவேந்தர் வசித்த பெருமாள் கோவில் இல்லம் 1971ல் அரசுடைமையாக்கப்பட்டு, அருங்காட்சியமாக மாறியது. 1977ல் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் பாரதிதாசன் நினைவு நுாலகம் காட்சிக் கூடம் ஆகியவற்றை ஆராய்ச்சிக் கூடமாக மாற்றி அமைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது.
அதையடுத்து 1978ல் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. 1984 ஏப்ரலில் இந்நினைவு நுாலகம் காட்சிக் கூடமானது. பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் ஆய்வு மையம் என பெயருடன் இயங்கத் துவங்கியது.
இந்த இரண்டு மாபெரும் கவிஞர்கள் வசித்த இல்லங்களையும் புதுச்சேரி அரசு புனரமைக்க முயற்சி எடுத்துள்ளதை தமிழறிஞர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளனர்.