/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின் கம்பங்களில் கட்டப்படும் பேனர்களால்... விபத்து அபாயம்; வில்லியனுாரில் சுப நிகழ்ச்சியினர் அட்டூழியம்மின் கம்பங்களில் கட்டப்படும் பேனர்களால்... விபத்து அபாயம்; வில்லியனுாரில் சுப நிகழ்ச்சியினர் அட்டூழியம்
மின் கம்பங்களில் கட்டப்படும் பேனர்களால்... விபத்து அபாயம்; வில்லியனுாரில் சுப நிகழ்ச்சியினர் அட்டூழியம்
மின் கம்பங்களில் கட்டப்படும் பேனர்களால்... விபத்து அபாயம்; வில்லியனுாரில் சுப நிகழ்ச்சியினர் அட்டூழியம்
மின் கம்பங்களில் கட்டப்படும் பேனர்களால்... விபத்து அபாயம்; வில்லியனுாரில் சுப நிகழ்ச்சியினர் அட்டூழியம்
ADDED : ஜூன் 24, 2025 02:04 AM

வில்லியனுார்: வில்லியனுார் பைபாசில் வைத்துள்ள சென்டர் மீடியனால் சாலை குறுகலாகிவிட்ட நிலையில், மின் கம்பங்களில் சாரம் கட்டி பேனர் வைப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி இந்திரா சதுக்கம் முதல் விழுப்புரம் சாலை எம்.என்.குப்பம் வரை தேசிய நெடுஞ்சாலை துறை சென்டர் மீடியன் அமைத்துள்ளது. இதனால், சாலை குறுகலாகி ஒரே நேரத்தில் இரு கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதேபோன்று மூலக்குளம், சுல்தான்பேட்டை, வி.தட்டாஞ்சாவடி, வில்லியனுார் பைபாஸ் பகுதிகளில் உள்ள சென்டர் மீடியன்களால் சாலை குறுகலாகி, ஒரே நேரத்தில் இரு கார்கள் முந்தி செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இச்சாலையில் உள்ள மின் கம்பங்களிலும், சென்டர் மீடியன்களிலும் தொடர்ந்து பேனர்கள் வைத்து வருகின்றனர். இந்த பேனர்களால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் 22ம் தேதி இரவு, வில்லியனுார் கோபால்சாமி நாயக்கர் திருமண நிலையத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவிற்கு ஒருநாள் முன்னதாகவே காங்., என்.ஆர்.காங்., அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களை வரவேற்று மண்டப வாயிலில் துவங்கி, எம்.ஜி.ஆர்., சிலை வரை போக்குவரத்துக்கே சிரமமாக உள்ள சாலையின் மின் கம்பங்களில் சாரம் கட்டி சாலையை அடைத்தபடி பேனர் வைத்துள்ளனர்.
இந்த பேனர்களால் சாலையின் அகலம் மேலும் குறுகி, நடந்து, சைக்களில் சென்றவர்கள் கூட சாலையோரத்தில் செல்ல முடியாமல், நடுரோட்டில் சென்றனர். . இதனால், வேகமாக வந்த வாகனங்கள் முந்திச் செல்ல முடியாததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பிரச்னை இப்பகுதியில் தொடர்கதையாகவே உள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் பேனர் வைப்பதை, நெடுஞ்சாலை, உள்ளாட்சி மற்றும் போலீஸ் என எந்த துறை அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை. இதனால், வில்லியனுார் பகுதியில் பேனர் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியில் அமலில் உள்ள பேனர் தடை சட்டத்தை ஆட்சியாளர்களே மதிப்பதில்லை. அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசியல்வாதிகள், தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தங்களை வரவேற்று பேனர் வைப்பதை ஊக்குவித்து வருவது பொதுமக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள், அவ்வப்போது அடிக்கும் காற்றில், சாய்ந்து ரோட்டில் செல்வோர் மீது விழுவதும், அதில், அப்பாவி மக்கள் பாதிப்பதும் புதுச்சேரியில் சாபக்கேடாகவே மாறிவிட்டது.
அரசியல்வாதிகள் சட்டத்தை மதிக்காவிட்டாலும், குறைந்த பட்சம் தங்களுக்கு ஓட்டு போடும் மக்களின் நலனை கருதியாவது, தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தங்களை வரவேற்று பேனர் வைக்க வேண்டாம் என தங்கள் ஆதரவாளர்களுக்கு அன்பு கட்டளையிட முன்வர வேண்டும்.