ADDED : ஜன 11, 2024 04:08 AM
புதுச்சேரி: நுாதன போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சி பிரமுகரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், கடலுார் சாலை முருங்கப்பாக்கம் சாலையில் உள்ள பள்ளத்தில் தாமரை பூவை வைத்து, சாலையில் படுத்து நுாதன போராட்டம் செய்தார். மேலும், முருங்கப்பாக்கம் சாலையை, இது தான் குஜராத் மாடல் சாலை என, அரசுக்கு எதிராக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து லெனின் வீதி வழியாக நடந்து சென்றார். மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை வழிமறித்து, கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, பைக்கில் தப்பி சென்றார்.
படுகாயடைந்த சுந்தர்ராஜன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.