Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடிப்படை வசதிக்கு ஏங்கும் அரிக்கமேடு

 அடிப்படை வசதிக்கு ஏங்கும் அரிக்கமேடு

 அடிப்படை வசதிக்கு ஏங்கும் அரிக்கமேடு


ADDED : மார் 08, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 03:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பழங்கால துறைமுகங்களில் ஒன்றான புதுச்சேரியின் அரிக்கமேடு துறைமுகத்தில் வெளிநாட்டு வாணிபம் மிகவும் செழிப்புற்று வளர்ந்திருக்கிறது. அரிக்கமேடு கி.மு., 200 முதல் கி.பி.,200 வரை புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது என, தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரிக்கமேட்டில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த மணிகள், மண்பாண்ட ஓடுகள், கிரேக்க, ரோமானியர்கள் அரிக்கமேட்டில் தங்கி நீண்ட காலத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர் என்பது உலகிற்கு தெரிய வந்துள்ளது. இதனை அகழாய்வு முடிவுகள் உலகிற்கு பறைச்சாற்றியுள்ளன.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் பாரம்பரிய சின்னமான அரிக்கமேட்டிற்கு இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

வார நாட்களில் சராசரியாக 3,000க்கும் மேற்பட்டோரையும், வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 5,000க்கும் அதிகமானோர் வருகின்றனர். குறிப்பாக அதிக அளவில் வெளிநாட்டு பயணிகளையும் அரிக்கமேடு ஈர்த்து வருகிறது.

ஆய்வில் அம்பலம் சுற்றுலா பயணிகள் குவியும் அரிக்கமேட்டில் அடிப்படை வசதிகள் படுமோசமாக உள்ளது தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளான சூழ்நிலையில் கடலோர காவல் படை போலீசாரும் அரிக்கமேட்டில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அடிப்படை வசதிகள் செய்து தராமல் படுமோசமாக இருப்பதை கண்டு நொந்துபோய் தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பொதுக் கழிப்பறை சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுக் கழிப்பறை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திறந்த வெளிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இது அரிக்கமேட்டின் புனிதத்தன்மையை குலைப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பொதுச் சுகாதார அச்சங்களை உருவாக்கியுள்ளது. சர்வதேச தரத்துக்கு ஒப்பான அடிப்படை வசதி இங்கு அவசரமாக ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

குடிநீர் வசதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையான வசதி இல்லாததால், குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குடிநீரை தேடி அங்கும் இங்கும் அலைகின்றனர். கோடைக்காலத்தில் குடிநீருக்காக சுற்றுலா பயணிகள் அலைந்து திரிவது பரிதாபமாக உள்ளது. கோடையில் குடிநீர் வசதி இல்லாதது ஆரோக்கியப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

எங்கும் இருள்... மாலை மற்றும் இரவு நேரங்களில் போதுமான மின்விளக்கு வசதிகள் இல்லாததால், அரிக்கமேட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்குகின்றன. இது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கும்மிருட்டு சமூக விரோதிகளுக்கு புகலிடமாக உள்ளதோடு,விரும்பத்தகாத சம்பவங்களுக்கு வாய்ப்பளிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.

பார்க்கிங்... சுற்றுலா வாகனங்களுக்கு தனி நிறுத்துமிடம் இல்லாதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எங்கு தோன்றுகிறதோ, அங்கு வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் விரைவாக செல்ல இயலாத நிலை உருவாகிறது. திட்டமிட்ட பார்க்கிங் வசதி இங்கு அமைத்தல் அவசியமாகும்.

பாதுகாப்பும் மோசம் பெருகிவரும் சுற்றுலா வருகையையும், வெளிநாட்டு பயணிகளின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாகத் தோன்றவில்லை. தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தவும், கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்கள் அமல்படுத்தப்பட வேண்டும்.

வரலாற்று தொன்மம் மிக்க அரிக்கமேட்டில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் படுமோசமாக உள்ளது உலக அரங்கில் புதுச்சேரிக்கு தான் தலைகுனிவை ஏற்படுத்தும். அரிக்கமேட்டில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு, சுகாதாரத்திற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிகவும் அவசியமானதாகும். புதுச்சேரி அரசும், தொல்லியல் துறையும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us