ADDED : ஜூலை 22, 2024 01:42 AM
பாகூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் 40;தனியார் நிறுவன ஊழியர். விடுமுறை நாட்களில் எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பிக் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரசு. இரண்டு மகள்கள் உள்ளனர்.
வேல்முருகன் நேற்று கிருமாம்பாக்கம் ஜெயவிலாஸ் நகரில் கட்டப்பட்டு வரும் வீட்டில் எலக்ட்ரிக் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மின்சாரம் அவரை தாக்கி மயங்கி விழுந்தார்.
அருகில், இருந்தவர்கள் அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் அறுபடை வீடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.