Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மும்மொழி கொள்கை விவகாரத்தில் சட்டசபையில் கூச்சல், குழப்பம் தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

மும்மொழி கொள்கை விவகாரத்தில் சட்டசபையில் கூச்சல், குழப்பம் தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

மும்மொழி கொள்கை விவகாரத்தில் சட்டசபையில் கூச்சல், குழப்பம் தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

மும்மொழி கொள்கை விவகாரத்தில் சட்டசபையில் கூச்சல், குழப்பம் தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

ADDED : மார் 14, 2025 04:18 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மும்மொழி கொள்கையை கண்டித்து தி.மு.க., -காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி 15வது சட்டசபையின் 6வது கூட்டத் தொடரின் 4ம் நாள் நிகழ்வு நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறளை வாசித்து சபை நடவடிக்கைகளை தொடங்கியதும், சட்டசபை அலுவல் ஆலோசனை குழுவின் பரிந்துரைத்த நேர ஒதுக்குதலுக்கு அனுமதி பெறப்பட்டது.

தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

வைத்தியநாதன், காங்.,: கவர்னரின் உரையில் உள்ள அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் எதுவும் தெரியவில்லை. பெஞ்சல் புயலில் புதுச்சேரியில் 56 செ.மீ., மழை பெய்தது,

தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து விசாரித்த பிரதமர், கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரி முதல்வரை தொடர்பு கொண்டு பேசவில்லை.

சபாநாயகர்: ஆளும் கட்சி என்பதால் தொடர்பு கொள்ளவில்லை.

அமைச்சர் நமச்சிவாயம்: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சரியாக செயல்படும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் என்பது பிரதமருக்கு தெரியும் என்பதால் கேட்கவில்லை, முதலை கண்ணீர் வடிக்காதீர்கள்.

அசோக்பாபு, சுயே.,: மன்மோகன் சிங் 10 ஆண்டு பிரதமராக இருந்தபோது, எத்தனை முறை புதுச்சேரி முதல்வரை தொடர்பு கொண்டு விசாரித்தார்.

கல்யாணசுந்தரம், பா.ஜ.,: புதுச்சேரியில் பெஞ்சல் புயல் நிவாரணம் ரூ.5,000 வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது.

வைத்தியநாதன்: புதுச்சேரி அரசு கேட்ட நிவாரணத்தை கூட மத்திய அரசு தரவில்லை.

நமச்சிவாயம்: சட்டத்திற்கு உட்பட்டுதான் மத்திய அரசு நிவாரணம் வழங்கும். ரூ.88 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது.

வைத்தியநாதன்: புயல், வெள்ளத்தால் பாதித்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. கணக்கெடுப்பு கூட நடத்தவில்லை. நிவாரணம் கொடுப்பது போல் தெரியவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் சிவா: புதுச்சேரி அரசு பெஞ்சல் புயல் நிவாரணமாக ரூ.755 கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.60 கோடிதான் கொடுத்தது. வீடு சேதமடைந்த ஒருவருக்கு கூட நிவாரணம் வழங்கவில்லை.

வைத்தியநாதன்: மும்மொழி கொள்கையில் உங்கள் நிலைப்பாடு என்ன? மும்மொழி கொள்கையை ஏற்கின்றீர்களா? இல்லையா?

நமச்சிவாயம்: மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போதுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் வந்தது என்றார்.

அமைச்சர் சாய் சரவணன்: தமிழ்நாடு என பெயர்வர காரணம் யார்?

செந்தில்குமார், தி.மு.க.,: பிரதமர் எந்த கல்லுாரியில் படித்தார்.

ராமலிங்கம், பா.ஜ.,: சங்கரலிங்கம்தான் தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டார்.

சிவா: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரைதான் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு கையெழுத்திட்டவர். ராமலிங்கம், பா.ஜ., தலைவராவதற்கு வாழ்த்துகள். அனைத்திற்கும் எழுந்து பேச கூடாது என்றார்.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: புதுச்சேரியில் மும்மொழி கொள்கை இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் என நான்குமொழி கொள்கை உள்ளது,

செந்தில்குமார்: இந்தியாவில் 2 அல்லது மூன்று மொழிகள் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் உள்ளன. அவரவர்களுக்கு விருப்பப்பட்ட மொழியை படிக்க விடுங்கள். திணிக்காதீர்கள்.

சிவசங்கர், சுயே.,: இந்தி அவசியம் தேவை.

செந்தில்குமார்: எம்.பி., தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டார். சீட்டு கொடுத்திருந்தா வெற்றி பெற்று டில்லிக்கு போய் இந்தி பேசியிருப்பார்.

வைத்தியநாதன்: இந்தியை ஆதரிக்கிறீர்களா?

அனிபால் கென்னடி, தி.மு.க.,: நாங்கள் இந்திக்கு எதிரி அல்ல. இந்தியை திணிக்க கூடாது என்கிறோம்.

தேனீ ஜெயக்குமார்: 1969ல் மத்தியில் காங்., ஆட்சி இருந்தபோதுதான் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

நமச்சிவாயம்: காங்., ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராஜேந்திரன் தீக்குளித்து இறந்தார். காங்., கட்சிக்கு இந்தி திணிப்பை பற்றி பேச தகுதி கிடையது. மும்மொழி கொள்கை வேண்டாம் என்பது உறுப்பினர் வைத்தியநாதன் கொள்கையா? அல்லது அவரது கட்சியின் கொள்கையா? தலைமையை கேட்டு பேசுங்கள்.

வைத்தியநாதன்: கட்சி தலைமையை கேட்டுத்தான் பேசுகின்றேன், மும்மொழி கொள்கை வேண்டாம் என்பதே காங்., கொள்கை.

நமச்சிவாயம்: மும்மொழி கொள்கை என்பது எங்கள் அரசின் கொள்கை.

வைத்தியநாதன்: அதனை முதல்வர் ஏற்று கொண்டாரா?

நமச்சிவாயம்: ஏற்று கொண்டதால் தான் கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கை புதுச்சேரியில் வந்துவிட்டது,

சிவா: அமைச்சரின் இந்த ஆணவ மற்றும் அராஜக அறிவிப்பை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நமச்சிவாயம்: இந்தி திணிப்பு கிடையாது, விருப்பப்படுபவர்கள் படிக்கலாம் என்றார்.

இவ்வாறு விவாதம் நடந்ததால் சபையில் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us