Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு 'டேப்லெட்'

ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு 'டேப்லெட்'

ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு 'டேப்லெட்'

ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு 'டேப்லெட்'

ADDED : ஆக 03, 2024 04:31 AM


Google News
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு இந்தாண்டு சிறப்பு கூறு திட்ட நிதியாகரூ. 488 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களின் 200 பயனாளிகள் வீட்டு மாடியில் நெட் மீட்டருடன் 2 கிலோ வோல்ட் சூரிய மின் தகடு நிறுவ 90 சதவீத மானியத்துடன் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வராத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த அனைவருக்கும் காமராஜர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.

அரசு பள்ளியில் 8 மற்றும் 9 ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 3 நாள் கல்வி டூர் அழைத்து செல்லப்படுவர். 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு 'டேப்லெட்' வழங்கப்படும். ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் விரிவுப்படுத்த தனிப்பட்ட அடையாள அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் கிராமம் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் 50 சதவீத்திற்கு மேல் வசிக்கும் 10 கிராமங்களை தேர்ந்தெடுத்து அடுத்த 3 ஆண்டுகளில் அங்கு உட்கட்டமைப்பு மேம்படுத்த கிராமத்திற்கு வருடத்திற்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும்.

மண்ணின் மகள் திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயதுள்ள பெண்கள் ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்கும்.

அரசு பள்ளியில் பயலும் மாணவிகளின் பெற்றோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.3,000 தொகை, ரூ. 6000ஆக உயர்த்தி வழங்கப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 ஊக்கதொகை, ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ. 1,500ல் இருந்து ரூ. 5000 ஆகவும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 2,500 உதவித்தொகை, ரூ. 8,000ம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வெளிநாட்டில் பயிலும் புதுச்சேரியைச் சேர்ந்த எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நெறிமுறைப்படி அமல்படுத்த உத்தேசிக்கப்பட் டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us