ADDED : ஜூன் 04, 2024 11:52 PM
பாகூர்: சேலியமேட்டில் முன்விரோதம் காரணமாக விவசாய கூலி தொழிலாளியை அரிவாளால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்த சேலியமேடு சமத்துவ நகரை சேர்ந்தவர் முருகை யன், 51; விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 31ம் தேதி மதியம் மேல் அழிஞ்சிபட்டு பாதை செல்லும் வழியில் முருகையன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, கோதண்டபாணியின் வாழை தோப்பில் மாடு மேய்ந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கோதண்டபாணி, கையில் வைத்திருந்த அரிவாளால், முருகையனை தாக்கியுள்ளார். இதில் முருகையனுக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முருகையனை அவரது உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சைக் பெற்று திரும்பிய முருகையன், இது குறித்து பாகூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கோதண்டபாணி மீது தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.