/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் கம்பி அறுந்து விழுந்து ரேஷன் கடை ஊழியர் பலி: பொதுமக்கள் சாலை மறியல் மின் கம்பி அறுந்து விழுந்து ரேஷன் கடை ஊழியர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
மின் கம்பி அறுந்து விழுந்து ரேஷன் கடை ஊழியர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
மின் கம்பி அறுந்து விழுந்து ரேஷன் கடை ஊழியர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
மின் கம்பி அறுந்து விழுந்து ரேஷன் கடை ஊழியர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 12, 2024 05:24 AM

பாகூர்: பாகூர் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில், ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்தார். மின் பாதையை பராமரிக்காத மின்துறையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாகூர் அடுத்த குடியிருப்புபாளையத்தை சேர்ந்தவர் பரசுராமன் 52; ரேஷன் கடை ஊழியர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். ரேஷன் கடைகளை மூடியதால் வேலை இழந்த பரசுராமன், குடியிருப்புபாளையத்தில் தனி நபருக்கு சொந்தமான நிலத்தை கவனித்து வந்தார். நேற்று மதியம் நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது, அவ்வழியாக சென்ற உயர் மின் அழுத்த கம்பியின் இன்சுலேட்டர் ஒன்று உடைந்ததால், மின்கம்பி தாழ்ந்து அவரின் மீது விழுந்துள்ளது.
மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பாகூர் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.
ஆத்திரமடைந்த பொது மக்கள் தடுத்து நிறுத்தி, பரசுராமனின் உடலை கொண்டு சென்று பாகூர் - வில்லியனுார் சாலை குடியிருப்புபாளையம் பஸ் நிறுத்தத்தில் வைத்து, மின் துறையின் அலட்சிய போக்கை கண்டித்தும், ஆதரவற்ற நிலைக்கு சென்ற அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடகோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, 'இப்பகுதியில் மின் கம்பிகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள நிலையில், அவை அவ்வப்போது அறுந்து விழுந்து மனிதர்கள் மட்டுமின்றி ஏராளமான கால்நடைகளும் பலியாகி உள்ளன. மின் துறையின் அலட்சியதால் தான் மீண்டும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து, பரசுராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மறியல் போராட்டத்தால், பாகூர் - வில்லியனுார் சாலையில் மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.