/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 5 மாதங்களில் 16 கொலைகள் கொலை நகரமாகும் புதுச்சேரி 5 மாதங்களில் 16 கொலைகள் கொலை நகரமாகும் புதுச்சேரி
5 மாதங்களில் 16 கொலைகள் கொலை நகரமாகும் புதுச்சேரி
5 மாதங்களில் 16 கொலைகள் கொலை நகரமாகும் புதுச்சேரி
5 மாதங்களில் 16 கொலைகள் கொலை நகரமாகும் புதுச்சேரி
ADDED : ஜூன் 02, 2024 04:59 AM
புதுச்சேரி சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமாகும். நகர பகுதியில் கூப்பிடும் துாரத்தில் அருகருகே போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளது. யூனியன் பிரதேசம் முழுவதும் 44 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன.
இவற்றை தவிர, கடலோர காவல், உணவு கடத்தல் தடுப்பு, பொருளாதார குற்றம் தடுப்பு என, 10 துணை போலீஸ் நிலையங்களும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கொலை உள்ளிட்ட குற்றங்கள் குறைந்தபாடு இல்லை.
ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் 150 ரவுடிகள், போலீசின் பட்டியலில் உள்ளனர். இவர்களில் சிலர் கஞ்சா விற்பனை, மாமூல் வசூல், கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபடுகின்றனர். தொழில் போட்டி காரணமாக மாறி மாறி வெட்டி கொலை செய்து கொள்கின்றனர்.
ரவுடிகள் ஒருவருக்கொருவர் அடித்து கொள்ளும்போது, சாதாரண பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்து சிறைக்கு அனுப்புகின்றனர்.
சிறையில் இருந்து வெளியே வரும் ரவுடிகள் கண்காணிக்கப்படுவது இல்லை. இதனால், எதிராளியை சமயம் பார்த்து வெட்டி கொலை செய்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், சாதாரண விஷயங்களுக்குகூட, எந்தவித பயமும் இல்லாமல் கொலை செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது.
இந்தாண்டு துவக்க தினமான ஜனவரி 1ம் தேதி அந்தோணியார் ஆலயம் அருகே, புத்தாண்டு கொண்டாடிவிட்டு வந்த நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் விக்கி (எ) விக்னேஸ்வரன், 24, அடித்து கொலை செய்யப்பட்டார்.
பிப்ரவரி 10ம் தேதி, பீச்சவீரன்பேட்டையை சேர்ந்த ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் அமுது ஆனந்தன், 28, மது குடிக்கும் தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதே மாதம், 12ம் தேதி, சாரம் வெங்கடேஸ்வரா நகர் இந்துமதியை, 37, கழுத்தை அறுத்து அவரது கணவர் கொலை செய்தார்.
மார்ச் மாதம், முத்தியால்பேட்டையில் மாயமான 9 வயது சிறுமி, கஞ்சா போதை கும்பலால் சீரழித்து, கொலை செய்யப்பட்டார்.
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 3 நாட்கள் கழித்து அவரது உடல் வாய்க்காலில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஏப்ரல் 5ம் தேதி, சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்த பாஸ்கர் (எ) ஜெயபாஸ்கரை, 48, அவரது மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார்.
தொடர்ந்து, 23ம் தேதி, பெரியார் நகரை சேர்ந்த ருத்ரேஷ், 27, முன் விரோதம் காரணமாக பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதே நாளில், அரியாங்குப்பம் புதுக்குளத்தை சேர்ந்த ஆனந்த் (எ) அலெக்ஸ், 33, என்ற கட்டட தொழிலாளி சாராயக்கடையில் அடித்து கொலை செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு முன், வம்பா கீரப்பாளையத்தில் ஜிம் மாஸ்டர் கல்லால் அடித்து கொடூரமாக கொல்லப்பட்டார்.
இந்தாண்டு துவக்கத்தில் இருந்து, நேற்று முன்தினம் மே 31ம் தேதி வரை, மொத்தம் 16 கொலை குற்றங்கள் அரங்கேறி உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் 26 கொலைகள், 20 கொலை முயற்சி வழக்குகள் பதிவானது. ஆனால், இந்தாண்டு முதல் 5 மாதத்திலேயே 16 கொலைகள் நடந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.