Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலுார் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற எம்.எல்.ஏ., எதிர்ப்பு

கடலுார் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற எம்.எல்.ஏ., எதிர்ப்பு

கடலுார் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற எம்.எல்.ஏ., எதிர்ப்பு

கடலுார் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ADDED : ஜூலை 16, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுஐச்சேரி கடலுார் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற சம்பத் எம்.எல்.ஏ., எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் பேனர்களை அகற்ற முடியாமல் திரும்பி சென்றனர்.

புதுச்சேரி, முதலியார்பேட்டை நயினார் மண்டபம் நாகாத்தமன் கோவில் செடல் திருவிழா வரும் 19ம் தேதி நடக்கிறது. விழாவிற்கு வருபவர்களை வரவேற்பதற்காக கடலுார் சாலை முழுவதும் அரசியல் கட்சியினர் பிரமாண்ட பேனர்களை வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் சிவா தனக்கு பிறந்த நாளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று அடிக்கடி கட்சி தொண்டர்களிடம் சொல்லி வரும் நிலையில், கடலுார் சாலையில் தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத்தை வரவேற்று தான் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கடலுார் சாலையில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதை கண்டு கடும் அதிருப்தியடைந்த வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் கடந்த 11ம் தேதி முதலியார்பேட்டை போலீசில், போட்டோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தார்.

அப்படி போட்டோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் கூட முதலியார்பேட்டை போலீசார், புதுச்சேரி நகராட்சி, பொதுப்பணித்துறை, சாலை பாதுகாப்பு குழுவுடன் இணைந்து சட்ட விரோத பேனர்களை அகற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து, தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப் பட்டது. இதன் எதிரொலியாக, வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பொதுப் பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் முதலியார்பேட்டை போலீசாருடன் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நேற்றிரவு அப்பகுதிக்கு சென்றனர்.

அங்கிருந்த பேனர்களை அகற்ற முயன்றபோது, தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திருவிழா முடியும் வரை பேனர்களை அகற்ற வேண்டாம் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், கோவில் திருவிழாவிற்கு வைத்துள்ள பேனர்களை அகற்ற வந்துள்ள நீங்கள் முதல்வர், அமைச்சர் பிறந்தநாள் அன்று வைக்கப்படும் பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுப்பீர்களாக என கேள்வி எழுப்பினார்.

இதனால், பொது மக்களுக்கு இடையூராக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அதிகாரிகள் அகற்ற முடியாமல் திரும்பி சென்றனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் ஒத்துழைப்பு இல்லை

முதலியார்பேட்டை மரப்பாலம் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையில் புதுச்சேரி நகராட்சி, பொதுப்பணித்துறை ஊழியர்கள், முதலியார்பேட்டை போலீசார் நேற்றிரவு சென்றனர். அப்போது, அங்கு வந்த தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் பேனர்களை எடுக்க எதிர்ப்பு தெரிந்தபோது, முதலியார்பேட்டை போலீசார் பின்வாங்கினர். போலீசாரின் ஒத்துழைப்பு கிடைக்காததால், சப் கலெக்டர் பேனர்களை எடுக்க முடியாமல் திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us