Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல மையத்தில் 'டயாலிசிஸ்' பிரிவு

கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல மையத்தில் 'டயாலிசிஸ்' பிரிவு

கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல மையத்தில் 'டயாலிசிஸ்' பிரிவு

கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல மையத்தில் 'டயாலிசிஸ்' பிரிவு

ADDED : ஆக 02, 2024 11:38 PM


Google News
புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல மையத்தில் புதிய டயாலிசிஸ் பிரிவினை துவங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு;

மத்திய அரசின் இ.எஸ்.ஐ., கோரிமேட்டில் இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனை, அரியாங்குப்பத்தில் 2 மருத்துவர்கள் கொண்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, மாகி, ஏனம் பிராந்தியங்களில் இ.எஸ்.ஐ., பயனாளிகளுக்கு ஏதுவாக தனியார் மருத்துவமனைகளில் இரண்டாம் நிலை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை எலும்பு முறிவு, விபத்துகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக வலி நீக்கும் சேவை பிரிவு துவங்கப்படும். தற்போதுள்ள வலி சிகிச்சையகத்தை உயர் தெளிவுத்திறன் கொண்ட அல்ட்ரா சோனோகிராபி, சி.ஆர்ம், ரேடியோ அதிர்வெண் கருவிகள், பி.ஆர்.பி., இயந்திரங்கள் போன்ற புதிய கருவிகளை கொண்டு மேம்படுத்தப்படும்.

இந்திரா காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் துறையில் குழந்தைகள் பிரிவு 24 மணி நேரமும் உள்நோயாளிகள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயக்கம் மற்றும் தெளிவற்ற குரலுக்கு சிகிச்சையளிக்க முழு அளவிலான வெர்டிக்கோ ஆய்வகம் அமைக்கப்படும். சிறுநீரகவியல் துறையில் லேப்ராஸ்கோபிக்கான உயர்வகை கேமரா, தற்போதுள்ள இ.எஸ்.டபுள்யூ.எல்., இயந்திரத்தை தரம் உயர்த்தல், ரோபோட்டிக்கு அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்படும்.

கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல மையத்தில் புதிய டயாலிசிஸ் பிரிவு துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கண்தான மையத்தை கண் வங்கியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார ஆயுஷ் திட்டத்தின் கீழ் பள்ளி சுகாதார திட்டமான ஆயுர்வித்யா விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ரெட்டியார்பாளையம் காந்தி நகர், கோரிமேடு இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் ஆயுஷ், யோகா பிரிவுகள் நிறுவப்படும்.

லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், கோரிமேடு, திருக்கனுார், காரைக்கால், மாகி பந்தக்கல் ஆகிய இடங்களில் புதிய நலவழி ேஹாமீயோபதி மையங்கள் துவங்கப்படும்.

ஏனம், அரியாங்குப்பம், லாஸ்பேட்டையில் புதிய சித்தா பிரிவுகள் திறக்கப்படும். தேசிய ஆயுஷ் மிஷன் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த ஆயுஷ் கல்வி நிறுவனம் புதுச்சேரியில் நிறுவப்படும். புதுச்சேரி பல்கலைக்கழகம், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ேஹாமியோபதி மருத்துவ பிரிவுகள், மருந்தகங்கள் துவங்கபடும்.

மத்திய ேஹாமியோபதி ஆராய்ச்சி குழுமத்தின் உதவியுடன் மருத்துவ தாவர வாரியம் அமைக்கப்படும். நடப்பாண்டு சுகாதார துறைக்கு 1,111.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us