ADDED : ஜூன் 15, 2024 05:06 AM
புதுச்சேரி: விஷவாயு தாக்கி மூன்று பேர் இறந்ததை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.
ரெட்டியார்பாளையம் புதுநகரில் விஷவாயு தாக்கி சிறுமி உட்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமாக ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.
மாநில செயலாளர் அன்பழகன், அவை தலைவர் அன்பானந்தம், ஜெ பேரவை செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினர்.
மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;
விஷவாயு தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பிற்கு முதல் காரணம், பாதாள சாக்கடை திட்டத்தை தகுதியற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது.
10 ஆண்டிற்கு முன், வைத்திலிங்கம் முதல்வராகவும், நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, ராம்கி என்ற பிளாக் லிஸ்டில் உள்ள நிறுவனத்திற்கு ரூ. 285 கோடி அளவில் பாதாள சாக்கடை டெண்டர் வழங்கப்பட்டது. இதில் ரூ. 20 கோடிக்கு மேல் கமிஷன் பெற்று கொண்டு பணி ஆணை வழங்கினர்.
கடந்த காங்., ஆட்சியில் பொதுமக்களே பாதாள சாக்கடை இணைப்பு அமைத்து கொள்ள அரசு அரசாணை வெளியிட்டதால், தகுதியற்ற ஒப்பந்தாரர்கள் மூலம் இணைப்பு கொடுத்தனர்.துர்நாற்றம் வீசுவது தொடர்பாக பல முறை புகார் கொடுத்தும் அரசு அலட்சியப்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டது.உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.