Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2,066 கோடி கடன்; மத்திய அரசு அனுமதி; முதல்வர் ரங்கசாமி தகவல்

நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2,066 கோடி கடன்; மத்திய அரசு அனுமதி; முதல்வர் ரங்கசாமி தகவல்

நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2,066 கோடி கடன்; மத்திய அரசு அனுமதி; முதல்வர் ரங்கசாமி தகவல்

நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2,066 கோடி கடன்; மத்திய அரசு அனுமதி; முதல்வர் ரங்கசாமி தகவல்

ADDED : ஆக 03, 2024 04:36 AM


Google News
புதுச்சேரி : நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ. 2,066 கோடி கடன் தொகையாக திரட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: பிரதமராக மோடி 3 வது முறையாக தேர்ந்தெடுத்த நாட்டு மக்களின் நம்பிக்கையை பாராட்டுகிறேன். பிரதமர் தலைமையின் கீழ் வரும் ஆண்டுகளில் விக்சித்பாரத் 2047 திட்டம் முழுமையாக நிறைவடையும் என உறுதியாக நம்புகிறேன். அண்மையில் நடந்த லோக்சபா தேர்தல் சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்தது.

இதற்காக ஓய்வின்றி பணியாற்றிய அனைத்து துறை ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்களுக்கு பாராட்டுகள். ஏழை எளிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை முதன்மையாக கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக மொத்த உற்பத்தி குறியீடு, தனி நபர் வருமானம் நிலையாகவும், சீராகவும் வளர்ந்து வருகிறது.

கடந்த 1.4.2024 முதல் 31.8.2024 வரை 5 மாதங்களுக்கு அரசின் அன்றாட செலவினங்களுக்காக முன்னளி மானியமாக ரூ.5 ஆயிரத்து 187 கோடிக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மூலதன செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுசெய்வதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

2024 - 25ம் ஆண்டின் பட்ஜெட் ரூ.12,700 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.6,914.66 கோடி அரசின் சொந்த வருவாய். பேரிடர் நிவாரண நிதியும் சேர்த்து மத்திய அரசின் நிதியுதவி ரூ.3,268.98 கோடி. மத்திய சாலை நிதி ரூ.20 கோடி மற்றும் மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.430 கோடியாக இருக்கும்.

நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2,066.36 கோடி கடன் தொகையாக திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பட்ஜெட்டில் ரூ.10,969.80 கோடி வருவாய் செலவினங்களுக்காகவும், ரூ.1,730.20 கோடி மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை போல இந்த நிதியாண்டிலும் அனைத்து துறைகளுக்குமான சிறப்பு நிதியாக ரூ.2,442.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெண்களுக்கு ரூ.1,403.46 கோடியும், இளைஞர்களுக்கு ரூ.516.81 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்துக்கு ரூ.521.83 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் நிதி ஆதாரத்தின் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் ரூ.2,574 கோடி சம்பளத்துக்கும், ரூ.1,388 கோடி ஓய்வூதியத்திற்கும், ரூ.1,817 கோடி கடன், வட்டி செலுத்தவும், ரூ.2,509 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசின் மற்ற முக்கிய நலத்திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி, கியாஸ் சிலிண்டர் மானியம் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரூ.1,900 கோடியும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.420 கோடியும், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக 1082 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us