/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அண்ணா திடல் மினி ஸ்டேடியம் கட்டுமான பணி... தொய்வு அண்ணா திடல் மினி ஸ்டேடியம் கட்டுமான பணி... தொய்வு
அண்ணா திடல் மினி ஸ்டேடியம் கட்டுமான பணி... தொய்வு
அண்ணா திடல் மினி ஸ்டேடியம் கட்டுமான பணி... தொய்வு
அண்ணா திடல் மினி ஸ்டேடியம் கட்டுமான பணி... தொய்வு
ADDED : ஜூலை 24, 2024 06:23 AM

புதுச்சேரி : அண்ணா திடலில் கட்டப்படும் மினி ஸ்டேடியம் கட்டுமான பணியில் ஒருங்கிணைப்பு இல்லாததால் கட்டி முடிப்பதில் இழுப்பறி நீடித்து வருகிறது.
புதுச்சேரி நகரின் மையத்தில் உள்ள அண்ணா திடலில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 9.60 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் கட்டும் பணி கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி துவங்கியது. கால்பந்து, டென்னிஸ், பேட்மிட்டன் மைதானங்கள், பார்வையாளர்கள் கேலரிகளுடன் அமைகிறது.
மைதானத்தை சுற்றி அண்ணா சாலை குபோர் பஜாரில் இருந்த 80 கடைகள், லெப்போர்த் வீதியில் 20, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் 79 கடைகளை இடித்து அகற்றிவிட்டு புதிய கடைகள் கட்டும் பணிகள் நடந்தது. இப்பணிகள் ஓராண்டு காலத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
மைதானம் கட்டுவதிற்கு தனியார் கன்சல்டிங் அமைப்பு கொடுத்த பிளான் சரிவர ஆய்வு செய்யாமல், டெண்டர் விடப்பட்டது. அதனால் கட்டுமான பணிகள் நடக்கும் போதே திட்டத்தில் பல மாற்றங்களை ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் செய்தனர். இதனால் டெண்டரில் குறிப்பிட்ட தொகையை விட கூடுதல் செலவினம் ஏற்பட்டது.
தற்போது ரூ. 10.5 கோடிக்கு பணிகள் முடிந்துள்ளது. இன்னும் ரூ. 3 கோடிக்கு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து, மைதானத்தில் மண் நிரப்பி வடிகால் வாய்க்கால், பெயிண்டிங், எலட்ரிக்கல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளுக்கும், கட்டட ஒப்பந்தாரர்களுக்கும் இடையே சுமூகமான போக்கு இல்லாததால் கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மைதானத்தில் மண் கொட்டுவதற்கான உயரம், வடிகால் வாய்க்கால் உயரம் உள்ளிட்டவைக்கு சரியான பிளான் கொடுக்காததால் பணிகளை மேற்கொள்ள முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால், குபேர் பஜாரில் இருந்த 80 கடைகளில் தற்போது 4 அடி அகலத்தில் 51 கடைகளும், 8 அடி அகலத்தில் 12 கடைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. 17 கடைகள் குறைவாக உள்ளது. மீதமுள்ள வியாபாரிகளுக்கும் கடைகள் கட்டி கொடுக்க குபேர் பஜார் வியாபாரிகள் போர்கொடி துாக்கி உள்ளனர்.
கூடுதல் நிதி, இடநெருக்கடி, ஸ்மார்ட் சிட்டி மற்றும் கட்ட ஒப்பந்தாரர்களுக்கு இடையிலான பிரச்னைகள் காரணமாக மினி ஸ்டேடியம் பணி கட்டி முடிப்பது கேள்வி குறியாகி உள்ளது.
முதல்வர் தலைமையில், தொகுதி எம்.எல்.ஏ., ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம், கட்டுமான நிறுவனம், குபேர் பஜார் கடை உரிமையாளர்கள் ஒரே இடத்தில் ஆலோசனை நடத்தினால் இதற்கு தீர்வு கிடைக்கும்.
குபேர் பஜார் கடை உரிமையாளர் சங்க தலைவர் ராதா கூறுகையில், 'குபேர் பஜாரில் கடை வைத்திருந்த அனைவருக்கும் கடை உண்டு என கூறுகின்றனர். ஆனால் கடையை காண்பிக்க கூறினால் காட்ட மறுக்கின்றனர். அதிகாரிகள் மாறி மாறி குற்றம் சாட்டி கொள்கின்றனர். தவறுகளை சுட்டி காட்டினால் அதை சரிசெய்ய முன்வருவதில்லை. 80 அடி அகலத்திற்கு அலுவலகம் வாயில் அமைத்துள்ளனர்.
அதற்கு பதில், இரு பக்கத்திலும் தலா 6 அடி கொடுத்தால் 12 அடி கிடைக்கும். அதில் பல கடைகள் கட்டலாம். அதுதவிர சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி மற்றும் லப்போர்த் வீதியில் கூடுதலாக கட்டிய கடைகளை மீதமுள்ள வியாபாரிகளுக்கு கொடுக்கலாம்' என்றார்.
ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், 'ஒப்பந்தாரர் சரியான முறையில் பணிகளை செய்யவில்லை. அரசு குறிப்பிடும் சில கட்டுமான பணிகளை செய்வதில் முரண்டு பிடிக்கிறார். இதனால் கட்டுமான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்' என்றார்.
கட்டுமான நிறுவனத்தினர் கூறுகையில், 'ஏற்கனவே, அளித்த பிளானில் புதிய கட்டுமானத்தை செய்ய கூறினால், அதற்கு எழுத்து பூர்வமாக ஆர்டர் கொடுக்க வேண்டும். அப்போது தான் அதற்கான பில் எனக்கு கிடைக்கும். ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் அதனை தர மறுத்து, வாய்மொழியாக பணிகளை செய்ய கூறுகின்றனர். அதை செய்தால் அதற்கான தொகை தரமாட்டார்கள். இதே நிலை நீடித்தால் நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை' என்றார்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறுகையில், 'மினி ஸ்டேடியம் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள கடைகளை அந்தந்த வியாபாரிக்கு ஒதுக்கும் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும்' என்றார்.