Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ முதல்வர் ஸ்டாலினை பதவி விலக சொல்வாரா திருமாவளவன்: பா.ஜ.,

முதல்வர் ஸ்டாலினை பதவி விலக சொல்வாரா திருமாவளவன்: பா.ஜ.,

முதல்வர் ஸ்டாலினை பதவி விலக சொல்வாரா திருமாவளவன்: பா.ஜ.,

முதல்வர் ஸ்டாலினை பதவி விலக சொல்வாரா திருமாவளவன்: பா.ஜ.,

UPDATED : ஏப் 24, 2025 03:16 AMADDED : ஏப் 23, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
சென்னை:'மதத்தின் பெயரால், மனிதநேயத்திற்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளை, ஆதரிக்கும் விதமாக திருமாவளவன் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்ய துணிவார் என்பதை காட்டுகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காங்கிரஸ் ஆட்சியில், காஷ்மீரில் துணிச்சலான நடவடிக்கை எடுக்க அஞ்சியது தான், அனைத்து பிரச்னைகளுக்கும் மூலக்காரணம். நாட்டை துண்டாட துடித்தவர்களின் கரங்களை, தங்களின் ஓட்டு அரசியல் வாயிலாக பலப்படுத்தியது காங்கிரஸ். ஆனால், தேசத்தின் வலிமையை, ஒற்றுமையை, சம உரிமையை நம்பும் பா.ஜ., ஆட்சியில், காஷ்மீர் மீட்டெடுக்கப்பட்டது.

பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் கூறுவதை விட, இழப்புகளுக்கு அஞ்சலி செலுத்துவதை விட, வி.சி., தலைவர் திருமாவளவன் கருத்தில், பா.ஜ., அரசு, 370வது சட்டப்பிரிவை நீக்கியதை குறை சொல்வது தான் விஞ்சி நிற்கிறது. ஒட்டுமொத்த தேசமும், பயங்கரவாதிகளுக்கு எதிராக நிற்கும் போது, 'இண்டி' கூட்டணியும், அதன் பங்காளியான திருமாவளவனும், 370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு மட்டுமே எதிராக உள்ளனர். இதில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி விலக சொல்கிறார் திருமாவளவன்.

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள், ஜாதிய படுகொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று, காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள, சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டில் நம்பர் 1 முதல்வர் ஸ்டாலினை, பதவி விலக சொல்லாத திருமாவளவன், அமித் ஷா பதவி விலகக் கோருவதில் நியாமில்லை.

கோவை குண்டு வெடிப்புக்கு காரணமான, குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு பாதுகாப்பு கொடுத்தது தி.மு.க., அரசு.

வி.சி.,யும் தன் பங்குக்கு அவருக்கு மரியாதை செலுத்தியது. இதற்கு பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டிய திருமாவளவன், அமித் ஷாவை பதவி விலக சொல்வது நியாயமா? மதத்தின் பெயரால் மனிதநேயத்திற்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திருமாவளவன் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்ய துணிவார் என்பதை காட்டுகிறது. தேசத்தின் வளர்ச்சியை மனதில் நிறுத்தாமல் எல்லாவற்றிலும், அரசியல் செய்யும் போக்கை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us