பீஹார் தேர்தல் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை அறிவிக்க காங்கிரஸ் தயங்குவது ஏன்?
பீஹார் தேர்தல் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை அறிவிக்க காங்கிரஸ் தயங்குவது ஏன்?
பீஹார் தேர்தல் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை அறிவிக்க காங்கிரஸ் தயங்குவது ஏன்?
ADDED : செப் 14, 2025 11:48 PM

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக, அங்குள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
இங்கு, சமீபத்தில் வாக்காளர் பட்டியலில் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணி, புதிய அரசியல் போராட்டத்தை அங்கு முன்னெடுத்துள்ளது.
எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், வாக்காளர் அதிகார யாத்திரையை அங்கு சமீபத்தில் நடத்தினார்.
மவுனம் இந்த யாத்திரையில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்ட களத்தில், இண்டி கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாக காணப்பட்டாலும், சட்டசபை தேர்தலின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அவர்களிடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்படுகிறது.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரான தேஜஸ்வி யாதவோ, முதல்வர் வேட்பாளர் நான்தான் என பலமுறை மறைமுகமாக கூறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.
இது தொடர்பாக, ஊடகத்தினர் பலமுறை கேள்வி எழுப்பிய போதும், பீஹார் முதல்வரை மக்களே தேர்வு செய்வர் என அக்கட்சி கூறி வருகிறது.
முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை அறிவிப்பதில் காங்கிரஸ் தயக்கம் காட்டுவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. இது, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியையும், அதன் தலைவர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
வாக்காளர் அதிகார யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை, வரும் 16ம் தேதி தேஜஸ்வி துவங்க உள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான பனிப்போரால், காங்கிரசார் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டாமல் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை முன்னிறுத்த காங்கிரஸ் தயங்குவதற்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன.
குறிப்பாக, மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 50 இடங்களுக்கு மேல் வழங்க விரும்பாத ராஷ்ட்ரீய ஜனதா தளத்திடம், பேரம் பேசுவதற்காகவே தேஜஸ்வி பெயரை காங்கிரஸ் தவிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அழுத்தம் இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஒருவர் கூறியுள்ளதாவது:
கடந்த 2020 சட்டசபை தேர்தலின் போது, எங்களுக்கு 70 இடங்கள் வழங்கப்பட்டன. ஆனால் , வெல்ல முடியாத இடங்கள் ஒதுக்கப்பட்டதால், நாங்கள் 19 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றோம்; 51 தொகுதிகளை இழந்தோம். ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் எங்கள் செயல்திறன் மேம்பட்டது.
ஒன்பது இடங்களில் போட்டியிட்டு, மூன்றில் வென்றோம். சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் ஆதரவும் கிடைத்ததால், நான்கு தொகுதிகள் காங்கிரசுக்கு கிடைத்தன.
அதேசமயம், லோக்சபா தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், அதே நான்கு இடங்களையே வென்றது.
ஆகையால், இந்த முறை கூடுதல் தொகுதிகளை, குறிப்பாக 50க்கும் மேற்பட்ட இடங்களை பெறுவதற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மீதான சொத்து குவிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில், அவரது மகன் தேஜஸ்வி பெயர் இருப்பதும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரசார சமயங்களில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தும் என்பதால், தேஜஸ்வி பெயரை அறிவிக்க காங்கிரஸ் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்றொரு காரணம் யாதவ சமூகத்தைச் சேர்ந்த அவரை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினரின் ஓட்டுகள் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு சென்றுவிடும் என்பதாலேயே, தேஜஸ்வி பெயரை முன்மொழிய காங்கிரஸ் தயங்கி வருவது மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டால், நிச்சயம் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்படும் என்பதால், இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற 'சஸ்பென்ஸ்' விரைவில் உடைந்துவிடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -