பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது ஏன்?
பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது ஏன்?
பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது ஏன்?
ADDED : ஜூலை 31, 2024 05:46 AM

சென்னை: ரேஷனில் வழங்க, 40,000 டன் துவரம் பருப்பு, 4 கோடி லிட்டர் பாமாயில் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆகஸ்டிலும் கார்டுதாரர்களுக்கு உரிய நேரத்தில் பருப்பு, பாமாயில் வழங்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
ரேஷன் கடைகளில் கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதை, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. அதன்படி, 40,000 டன் துவரம் பருப்பு; 4 கோடி லிட்டர் பாமாயில் வாங்க வாணிப கழகம், இம்மாதம் 27ம் தேதி, 'டெண்டர்' கோரியது. அவற்றை வாங்குவதற்கு, நிதித்துறை இதுவரை ஒப்புதல் தரவில்லை.
இதனால், கொள்முதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த மூன்று மாதங்களாக பருப்பு, பாமாயில் சரியாக வினியோகம் செய்யப்படாததால், கார்டுதாரர்கள் சிரமப்பட்டனர். இதே நிலை அடுத்த மாதமும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து, உணவு துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை நிறுத்துவது குறித்து, நிதித்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். இதற்கு மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவதால் ஏற்படும் நிதி நெருக்கடியே காரணம். பருப்பு, பாமாயில் கொள்முதலில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. தங்களுக்கு வேண்டிய நிறுவனம் என்றால், கூடுதல் விலை கொடுத்தும் வாங்கும் அதிகாரிகள், செலவை குறைப்பதாக கூறி, டெண்டர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
அதனால் மாதம், 20,000 டன் பருப்பு தேவைப்படும் நிலையில், கடந்த மாதம், 8,000 டன் பருப்பு மட்டுமே வாங்கப்பட்டது. இதனால், பல கிராம ரேஷன் கடைகளில் பருப்பு வினியோகம் செய்யப்படவே இல்லை. இதை, அரசியல் கட்சிகள் கண்டித்தன. எனவே, இரு மாத தேவைக்காக, 40,000 டன் துவரம் பருப்பு, 4 கோடி லிட்டர் பாமாயில் வாங்க இம்மாதம், 27ம் தேதி டெண்டர் நடந்தது. அதில், நிறுவனங்கள் வழங்கிய தொழில்நுட்ப புள்ளி திறக்கப்பட்ட நிலையில், விலை புள்ளி இன்னும் திறக்கப்படவில்லை. விலை புள்ளியில் தான் நிறுவனங்கள் வழங்கிய விலை விபரம் இருக்கும். விலை குறைப்பு பேச்சு நடத்தி பருப்பு வாங்கப்படும்.
ஆனால், அதிகாரிகள் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிதித்துறை அனுமதி தராததால், டெண்டர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்கின்றனர். தற்போதைய நிலை தொடர்ந்தால், ஆகஸ்டிலும் ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைக்காத நிலை ஏற்படும். இதுகுறித்து, முதல்வர் விசாரித்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.